தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்களை மாற்ற முயற்சி?

மதுரை, தேனியைப்போல தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்களை மாற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் துணையுடன் ஆளும்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அந்த குற்றச்சாட்டுக்களை உண்மையாக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளும், கலெக்டரும் மாறி, மாறி கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் ஓட்டுமொத்தமாக குற்றம்சாட்டியுள்ளன.

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலின்போது தர்மபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும், திருவள்ளூரில் ஓட்டுக்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக ஓட்டுக்கள் பதிவானதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மறு தேர்தல் நடத்தும்படி திமுக கோரிக்கை விடுத்தது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்திருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ கூறியிருந்தார். இதனால் அங்கு மறு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், பாதுகாப்பாக பல்வேறு கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு வெளியே சீல் வைக்கப்பட்டன. துப்பாக்கிய ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

இந்தநிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடும் தேனி தொகுதிக்கு நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

இதனை தாசில்தார் மணவாளன் பெற்று, தாலுகா அலுவலகத்தில் வைத்தார். தேர்தலே நடந்து முடிந்த நிலையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்ததால் பரபரபு ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஓட்டுப்பதிவான இயந்திரங்களை மாற்றிவிட்டு, இவற்றை வைக்கப்போவதாக தகவல் பரவியது. தேனி மக்களவை மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிகளுக்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டன. இங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், நள்ளிரவில் அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற ஆளும் கட்சியினர் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின.

இதனால், தேனி மாவட்ட திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அமமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புதிய இயந்திரங்கள் வருகை குறித்து அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும் என ேகாஷமிட்டனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவுப்படி 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன. ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் இங்கு உள்ளன. இங்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தவிதமான வாக்குகளும் பதிவாகவில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளோம்’’என்றார். ஆனால் ஏன் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறித்து அவர் தெளிவான பதில் எதுவும் கூறவில்லை. அதேநேரத்தில், ‘‘தமிழக தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ கூறும்போது, மறுதேர்தல் நடத்தப்படலாம் என்பதற்காக 50 வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்றதாக’’ கூறியிருந்தார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் மறு தேர்தல் கேட்காத நிலையில் ஏன் தேனியில் மறுதேர்தல் நடைபெறுகிறது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான பல்லவி பல்தேவ் மற்றும் சத்தியப்பிரதா சாஹூ ஆகியோர் தெரிவிக்கவில்லை. ஆனால் நேற்று மீண்டும் விளக்கம் அளித்த சாஹூ, ‘மாநிலத்தில் 46 இடங்களில் மாதிரி வாக்குகள், ஒரிஜினல் வாக்குகளுடன் சேர்ந்து விட்டன. இதனால் அங்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் அல்லது அரசியல் கட்சிகளுடன் கலந்து பேசி, அந்த ஓட்டுக்களை மட்டும் கழிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஒரு வேளை மறு தேர்தல் நடத்தப்பட்டால், அதற்கு தயாராக முன் கூட்டியே வாக்கு இயந்திரங்களை தேனிக்கு கொண்டு சென்றதாக கூறியிருந்தார்.

தேர்தல் முடிந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், தினமும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் சாஹூ ஏன் 46 இடங்களுக்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பிய தகவலை தெரிவிக்கவில்லை என்று தற்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால் இந்த கேள்விக்கு சாஹூவால் நேரடியாக விளக்கம் அளிக்க முடியவில்லை.

முன் கூட்டியே கடிதம் அனுப்பிவிட்டதாக கூறுகிறார். ஆனால் தேர்தல் ஆணையமும், ஆளும் கட்சியும் சேர்ந்து கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதாக ஏற்கனவே தமிழகத்தில் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் எல்லாமே நாடகம் என்பது அதிகாரிகளின் பதில் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஏற்கனவே, மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் தாசில்தார் சம்பூரணம், 3 ஊழியர்களுடன் அத்துமீறி நுழைந்து, 3 மணிநேரம் தங்கியிருந்து ஆவணங்களை அள்ளிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் புகார் செய்த பிறகும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அதேபோலத்தான் தற்போதும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், தேர்தல் முடிந்த பிறகு இங்கு ஓட்டு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது ஏன்? தற்போது தேர்தல் அறிவிப்பு இல்லாத நிலையில் ஏன் கொண்டு வந்தனர்? யாருக்கும் தெரியாமல் கொண்டு வரவேண்டியதன் அவசியம் என்ன? கோவையில் இருந்து தேனிக்கு ஏன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன? தர்மபுரியில் மறு வாக்குப்பதிவு கேட்டநிலையில், அங்கு ஏன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படவில்லை? என்று பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. ஆனால் இவை எதற்கும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. இதனால், தேனி மக்களவை ெதாகுதி அல்லது ஆளும் அதிமுகவை காப்பாற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் நடைபெற்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற திட்டமிட்டார்களா என்ற சந்தேகமும் எழுந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு குளறுபடிகளுக்கு தேர்தல் ஆணையம்தான் காரணமாக உள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை முறையாக நடப்பதை தலைமை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை என்ன வேண்டுமானாலும் ஆளும் கட்சியும், தேர்தல் ஆணையமும் செய்யலாம் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகளும், தொண்டர்களும் இருக்கும் சூழ்நிலைதான் உள்ளதாக கூறப்படுவது, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது என்று நடுநிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.-

Related posts