இந்திய விமானப்படையின் துல்லிய தாக்குதல் ரகசிய திட்டங்கள்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று காலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பின்வருமாறு, கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதி தாக்குதல் நடத்தினான். இதில் அந்த வாகனமும், பஸ்சும் வெடித்து சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் பஸ்சில் இருந்த வீரர்கள் உடல் சிதறி பலியாகி விழுந்தனர். இந்த கொடூர தாக்குதலில் 41 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உடல் சிதறி கோரமாக பலியாயினர்.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 15 விமானப்படை தளபதி பிரேந்திர சிங் தோவானிடம் மத்திய அரசு தாக்குதல் திட்டம் தொடர்பான அறிக்கை கேட்டறிந்தது. பிப்ரவரி 16 முதல் 20 தேதி வரை பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்க வேண்டிய இடங்களை இந்திய விமானப்படை தீர்மானித்திருந்தது.
பிப்ரவரி 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாமிட்டுள்ள இடங்கள் மற்றும் தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பிப்ரவரி 21-ம் தேதி, இந்த திட்டம் குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்றார்.

பிப்ரவரி 22–ம் தேதி, குவாலியரில் உள்ள ஐ.ஏ.எஃப்-1 ஸ்குவாட்ரான் டைகர் பிரிவு மற்றும் ஸ்குவாட்ரான் 7-ஐ சேர்ந்த Battle Axes பிரிவு விமானங்கள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலேயே மிகப் பழைமையான ஸ்குவாட்ரான்கள், வானத்தின் புலிகள் எனப்படும் மிராஜ் ரக விமானங்களின் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தாக்குதலுக்கு பயன்படுத்த 12 விமானங்கள் தேர்வு செய்யப்பட்டது. பிப்ரவரி 24-ம் தேதி, ஆக்ராவிலிருந்து வந்த வானத்தில் எரிபொருள் நிரப்பும் விமானத்துடன், மிராஜ் ரக விமானங்களை இணைந்து ஒத்திகை பார்க்கப்பட்டது. பிப்ரவரி 25-ம் தேதி முதல் 26-ம் தேதி அதிகாலை 3:30 மணி வரை, மிராஜ் விமானங்களில் இஸ்ரேல் தயாரிப்பான லேசர் கதிர் வழியாக இயங்கும் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டது. IAF Heron surveillance ட்ரோன் எல்லை பகுதியில் ரகசிய இடத்துக்குக் கொண்டு வரப்பட்டது. விமானிகள் இலக்குகளை மீண்டும் ஒருமுறை கடைசியாக சோதித்துப் பார்த்துக்கொண்டனர். இறுதி உத்தரவு கிடைத்ததும், 10 நிமிடத்தில் தீவிரவாதிகளை முடித்துவிட்டு இந்திய விமானங்கள் மீண்டும் பத்திரமாக தாய்நாட்டுக்குள் வந்து சேர்ந்தனர்.

பிப்ரவரி 26-ம் தேதி இன்று, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, பாகிஸ்தானின் எல்லை தாண்டி இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசியதில் முஸாஃபராபாத் பாலகோட், சாக்கோதி பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. 12 மிராஜ் ரக விமாகங்கள் 1,000 கிலோ வெடிகுண்டுகள் வீசின. பாகிஸ்தானுக்குள் 50 கிலோ மீட்டர் தொலைவில் ஹைபர் பக்துவ்னா மாகாணத்தில் உள்ள பாலகோட் மீது தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஹிஸ்புல் முகாஜீதின் அமைப்புகள் அழிந்துபோனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 3.45 மணிக்கு முஸாஃபராபாத் 3.48 மணிக்கு பாலகோட், 3.58 மணிக்கு சக்கோதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதில்லை. 1999 கார்கில் போரின்போதுகூட இந்திய எல்லைக்குள் இருந்த பாகிஸ்தான் வீரர்கள்மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதே தவிர பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்கியதில்லை, இருந்தபோதிலும், இன்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் அளவுக்கு மாறியுள்ளது.

Related posts