சிக்காகோவில் ஜூலை மாதம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 6ம், 7ம் (தொடக்க விழா 5-ம் திகதி) திகதிகளில், அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துடன் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிக்காகோ தமிழ்ச் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

தனிநாயகம் அடிகள் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வண.சேவியர் தனிநாயகம் என்னும் ஈழத்து தமிழறிஞரால் 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் உலகத் தமிழாராய்ச்சி மன்றம். தமிழறிஞராக மட்டும் அல்லாமல் மிகச் சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்தவர் அவர்.

ஆங்கிலம், ரோமம், போர்ச்சுக்கீஸ், பிரெஞ்ச், ஜப்பனிஷ் ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும் வல்லமை பெற்றவர் தனிநாயகம் அடிகளார்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குச் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் இருந்த தமிழ்

நூல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து உலகுக்குத் தெரிவித்தவர். இவர் 1951-ம் ஆண்டு ‘தமிழ் கல்ச்சர்’ என்னும் ஆங்கில இதழை ஆரம்பித்து நடத்தி வந்தார். 1964-ம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்னும் அமைப்பை பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் மற்றும் இருபத்தாறு தமிழறிஞர்களுடன் இணைந்து தொடங்கினார். இரண்டாண்டுக்கு ஒருமுறை உலகெங்கிலும் இருக்கும் தமிழ் ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைக்கும் மாநாடுகளை நடத்தும் நோக்கில் இந்த மன்றம் தொடங்கப்பட்டது.

முதல் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16-,23 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்டது. இதுவரை ஒன்பது மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக, 2015 ஜனவரி 29 முதல் பெப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் இம்மாநாடு நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது.

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக, அமெரிக்காவின் சிக்காகோவைச் சேர்ந்த மருத்துவர் சோம.இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாநாட்டுப் பணிகளுக்காக அவர் சென்னை வந்திருந்தார். அவர் இம்மாநாடு தொடர்பான தகவல்களை விபரித்தார்.

“உலகத் தமிழாராய்ச்சி மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிக்காகோ தமிழ்ச் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிக்காகோ நகரில் நடத்தவிருக்கிறோம்.

சிக்காகோ நகரின் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த வருடம் பொன்விழா ஆண்டு. அதன் காரணமாகவே சிக்காகோவில் நடத்தத் திட்டமிட்டோம். ஜூலை 6ம், 7ம் திகதிகள், அதாவது இரண்டு நாட்கள் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக ஜூலை 4 மற்றும் 5 ஆகிய இரு நாட்களில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் 32ஆ-வது ஆண்டுவிழா, சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா ஆகியவற்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

எட்டு தலைப்புகளில் உலகெங்கிலும் இருந்து ஆய்வுக் கட்டுரைகளுக்கான சுருக்கங்களைக் கேட்டிருந்தோம். இதுவரை 1500 கட்டுரைச் சுருக்கங்கள் வந்திருக்கின்றன. அதிலிருந்து மிகச் சிறப்பான 150 கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்களுக்கு அனுப்பி விரிவான கட்டுரைகளைக் கேட்டிருக்கிறோம். கட்டுரை யார் எழுதியது எனத் தெரியாமல் இருக்க ஒவ்வொருவருக்கும் ஒரு எண் கொடுத்துள்ளோம். முழுக்கட்டுரைகள் வந்த பின்னர் அதிலிருந்து சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களை வைத்து மதிப்பீடு செய்து மாநாட்டு மலரில் வெளியிட இருக்கிறோம்.

அதுதவிர உலகத் தமிழ் தொழில் முனைவோருக்கான கூட்டத்தையும் நடத்தி, அவர்களையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். 5-ஆம் திகதி மாலை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தொடக்க விழாவை நடத்தத் திட்டுமிட்டுள்ளோம். தொடக்கவிழாவை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போன்ற மிகப் பெரிய ஆளுமைகளை வைத்து நடத்த முயற்சி செய்து வருகிறோம்.

எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் இந்த மாநாட்டை நடத்துவது எனத் தீர்மானித்துள்ளோம். உலகெங்கிலும் 136 நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்மொழிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

புலவர் சவரிமுத்து, மருதநாயகம் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் பல அறிஞர்களை இணைத்து ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தொல்பொருள் ஆராய்ச்சி சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பல ஆராய்ச்சியாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்களைப் பங்கேற்கச் செய்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிய இருக்கிறோம்.

மொழி சார்ந்து, தொல்பொருள் ஆராய்ச்சி சார்ந்து அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அதன் மூலம் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு ஆகியவை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கப்படவேண்டும்.

எதிர்காலத்தில் நல்ல தரமான ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.மாநாடு நடத்த அதிகமான பொருளாதார உதவிகள் தேவைப்படுகின்றன. தமிழகத்திலும், உலகெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் எங்களுக்கு நிதி உதவிகளைச் செய்து வருகிறார்கள். தமிழக அரசிடமும் உதவிக்காகக் கோரிக்கை முன்வைத்தோம். உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். அதேபோல மலேசியா, மொரீஷியஸ் போன்ற பல அரசுகளிடமும் உதவி கோரியிருக்கிறோம்.

இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற உலகின் பல நாடுகளிலிருந்து மக்கள் வருவதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். 5000_ 6000 பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். ஐந்து நாள்கள் தங்குபவர்களுக்கு 850 அமெரிக்க ​ெடாலர்கள், மூன்று நாள்கள் தங்குபவர்களுக்கு 550 அமெரிக்க ​ெடாலர் கட்டணமாக நிர்ணயித்திருக்கிறோம். தங்குமிடம், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்படும். எந்தவித அரசியல் கலப்பும் இல்லாமல் தமிழுக்காக தமிழறிஞர்கள் நடத்தும் இந்த மாநாட்டில் உலகத் தமிழர்கள் பெருவாரியாகக் கலந்து கொள்ள வேண்டும்.”

இவ்வாறு மருத்துவர் சோம. இளங்கோவன் விளக்கமளித்தார்.

10- வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கான குளோபல் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாலச்சந்திரன் இவ்வாறு கூறினார்.

“உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் முதல்முறையாக நடைபெற உள்ளது. தமிழ்மொழி, தமிழின் தொன்மை, தமிழ் இலக்கியம், தமிழர் கலாசாரம் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒரு தமிழராக இதை விட நமக்கு வேறென்ன மகிழ்வு வேண்டும்!உலகத் தமிழர்கள் அனைவரும் மாநாடு வெற்றிபெற வாழ்த்துவோம்! தமிழரின் தொன்மையை உலகெங்கும் கொண்டு செல்வோம்!”

இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.

Related posts