காஷ்மீர் சம்பவத்தை கேள்விப்பட்டதும் சிரித்தாரா பிரியங்கா?

புல்வாமாவில் நேற்று (வியாழக்கிழமை) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 46 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சிரித்ததாக கூறும் காணொளி ஒன்று வலதுசாரி அமைப்புகளின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

அந்த காணொளியை பகிர்ந்த பலரும் பிரியங்கா காந்தியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்த காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசி ஆய்வு செய்தபோது, அது போலியானது என்பது தெரியவந்துள்ளது.

புல்வாமா சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று இரவு உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டபோது அவர் சிரித்ததாக அந்த 11 நொடிகள் கொண்ட காணொளியை பகிர்ந்தவர்கள் பதிவிட்டுள்ளனர்.

ட்விட்டரில் @iAnkurSingh என்ற பெயரிலுள்ள கணக்கில் பதியப்பட்டுள்ள அந்த காணொளியை சுமார் ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். அது மட்டுமின்றி, இந்த காணொளி பல்வேறு வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று நடந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த வீரர்கள் குறைந்தது 46 பேர் உயிரிழந்த பிறகு, இந்த காணொளி பரப்பப்பட்டு வருகிறது.

பிரியங்கா காந்தி முன்னெப்போதோ பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து எடுக்கப்பட்ட காணொளியை மெதுவாக ஓடச் செய்து, அவர் சிரிப்பது போன்ற பகுதியை மட்டும் 11 நொடிகளுக்கு வெட்டி இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெறுவதாக இருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை இந்த தாக்குதலுக்கு பிறகு பிரியங்கா காந்தி ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. “அரசியல் குறித்து உரையாடுவதற்காகவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது உங்களுக்கு தெரியும்.

இந்நிலையில், புல்வாமாவில் நடந்த தாக்குதலில் எண்ணற்ற ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் அரசியல் பேசுவது பொருத்தமற்றதாக இருக்கும் நாங்கள் எண்ணுகிறோம்,” என்று பிரியங்கா காந்தி கூறியிருந்தார்.

“இந்த சம்பவம் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒற்றுமையுடன் துணை நிற்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரியங்கா காந்தி தனது பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டதாக பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts