பிரித்தானிய பிரஜைகளுக்கு இலவச பயண அனுமதி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு குறுகிய கால பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு, பிரெக்சிற்றுக்குப் பின்னர் இலவச பயண அனுமதியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருகின்றது.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியப் பேரவை விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானியப் பிரஜைகளுக்கான குறுகிய கால இலவச விசா அனுமதிக்கான சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் விவாதிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியப் பேரவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையில் அங்கத்துவம் வகிக்கும் 26 நாடுகளுக்கு 90 முதல் 180 நாட்களை உள்ளடக்கிய இலவச பயணத்துக்கு பிரித்தானியப் பிரஜைகள் விண்ணப்பிக்க முடியுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலுள்ள பிரித்தானியப் பிரஜைகள், ஐரோப்பிய பயணத் தகவல் மற்றும் அங்கிகாரத் திட்டத்துக்காக 7 யூரோவை செலுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய ஆணையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, பிரெக்சிற்றுக்குப் பின்னர், பிரித்தானியாவுக்கு குறுகிய கால பயணம் மேற்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளிடமிருந்து விசா அனுமதி தேவைப்படுவதை பிரித்தானியா விரும்பவில்லையென ஏற்கெனவே பிரித்தானியா கூறியிருந்தது.

எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்திலிருந்து பிரித்தானியா விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts