பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு பிரிட்டனில் பிடிவிறாந்து

லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தின்போது எல். ரி.ரி.ஈ ஆதரவாளர்களுக்கு கழுத்தை அறுப்பதாக சைகை காட்டிய குற்றத்திற்காக, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சிய வெஸ்ட் மின்ஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றமே இவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் “பப்லிக் இன்ட்ரெஸ்ட் லோ சென்றர்” என்ற தனியார் தரப்பினரால் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இதற்கிணங்க நேற்று முன்தினம் இம் மனுமீதான விசாரணை இடம்பெற்றது. இதன்போதே அந்தநீதிமன்றம் இந்தப்பிடியாணையைப் பிறப்பித்ததாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய இராஜ்சியத்தின் பொது மக்களின் அமைதியை பாதுகாப்பது தொடர்பான சட்டத்தை மீறியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாளியாக இனங்கண்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டசந்தர்ப்பத்தில் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் செயலகத்தில் பொதுநலவாய அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளுக்கான செயலகத்தின் ஊடாக நீதிமன்றத்திற்கு இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இச் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் பிரியந்த பெர்னாடோ ஐக்கிய இராச்சியத்தில் இருந்தார் என்றும் தற்போது அவர் அங்கு இல்லை என்றும் பொதுநலவாய அமைப்பின் சம்வதேச நடவடிக்கைகளுக்கான செயலகம் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி 04ம் திகதி இடம்பெற்ற இலங்கை சுதந்திர தின வைபவத்தின்போது லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அக்காரியாலயத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கு, அங்கு பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கழுத்தை அறுக்கும் விதத்தில் தமது கைகளினால் சைகை காட்டிய வீடியோ காட்சிகள் இணையத்தளங்கள் மூலம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts