வாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 03

நீ வளர்ந்து வந்த பின்னணியை ஏற்றுக்கொள்..

குழப்பத்துடனும் அச்சத்துடனும் வாழும் மனிதர்கள் தங்களுடைய கடந்த காலத்தை பார்க்க வேண்டும்.

நான் கடந்துவந்த பாதை பூக்களால் போடப்பட்டதல்ல கற்களும் முட்களும் நிறைந்ததென அரசியல் தலைவர்கள் கூட்டங்களில் முழங்குவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

காரணம் என்ன..?

நாம் நடந்து வந்த பாதைதான் இன்று நாம் வாழும் வாழ்க்கை முறைக்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது. எனவேதான் நாம் ஏன் இப்படியிருக்கிறோம் என்ற கேள்விக்கான விடை தேட வேண்டுமானால் வளர்ந்த விதத்தை திரும்பிப் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் அதில் உள்ள குறைபாடுகளை திருத்தாமல் வாழ்க்கையை வெற்றித்தடத்தில் நகர்த்த முடியாது.

குடும்பத்தில் துன்பப்படுத்தப்பட்ட பிள்ளைகள் தம் பெற்றோரை விரும்புவதில்லை. அவை தம்மையே விரும்புகின்றன என்பது மேலை நாட்டு சமுதாய சிந்தனையாளர் ஜஸ்பா யூல் என்பவரின் கருத்தாகும்.

பிள்ளைகள் நேசிக்கும் விதமாக பெற்றோர் வாழாமையும், பெற்றோரை துன்பப்படுத்தும்படியாக பிள்ளைகள் வாழ்வதும் சிக்கல்களை உருவாக்கிவிடுகிறது.

இதற்கெல்லாம் காரணமான சில விடயங்கள் வாழ்க்கையில் கிடக்கும் அவற்றை திரும்பிப் பார்த்து மாற்றம் செய்ய வேண்டும். இதோ அதற்கு சில உதாரணங்கள்.

01. உங்களால் நிறைவேற்ற முடியாத இலக்குகளை தொடும்படி பெற்றோர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்களா..? உங்களிடமிருந்து அதிக எதிர்ப்பார்ப்பு அவர்களிடமிருந்ததா..?

02. உங்கள் பெற்றோர் உங்கள் முன்னேற்றங்களை பாராட்டாமல், அங்கீகரிக்காமல் ஊமைகளாட்டம் வாழ்ந்தார்களா..?

03. விவாகரத்து அல்லது குடும்ப மரணம் போன்ற இழப்புக்களை உங்கள் குடும்பம் சந்தித்துள்ளதா..?

04. ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் குடும்பம் பயத்துடன் வாழ்ந்து வந்ததா.?

05. குடும்பத்தில் பிடிவாதமான மதவாதப் போக்கு இருந்ததா..?

06. உங்கள் குடும்பம் மதுபானத்தால் சீரழிந்த ஒரு குடும்பமா..?

07. நீங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தத்துப் பிள்ளை போல வளர்க்கப்பட்டீர்களா..?

08. நீங்கள் வளர்ந்தபோது குடும்பத்தில் எதிர்மறையான எண்ணங்களும் குறைகூறும் பண்புகளும் இருந்ததா..?

09. நீங்கள் உங்கள் உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிட குடும்பத்தில் தடை இருந்ததா..?

10. குடும்ப அங்கத்தவர் இரட்டை வேடம் கொண்ட போலி வாழ்க்கை வாழ்ந்தார்களா..

11. பொதுவாகவே தளம்பலான குடும்ப வாழ்வும் விளக்கம் தரமுடியாத சூறாவளிகள் வீசும் குடும்பமாகவும் உங்கள் குடும்பம் இருந்ததா..?

இவைகள் குடும்பத்தில் மாற்றியமைக்கப்படாமலே தொடர்ந்து வருகிறதா..? இதற்கு ஓர் உதாரணத்தை சூசன் தன் வாழ்வில் இருந்து தருகிறார்.

அப்போது எனக்கு சுமார் 12 – 13 வயதிருக்கும். பதின்ம வயதில் உள்ள காதலனை பார்த்துவிட்டு வீடு திரும்ப ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது. குறித்த நேரத்திற்கு வாராததால் வாசலில் தந்தையார் கடும் கோபத்துடன் காத்திருந்தார்.

அவரிடம் இனம்புரியாத எதிர்கால அச்சம் இருந்தது.

தன் மகள் தாமதமாக வருவதற்குரிய காரணத்தை கேட்கவில்லை. கோபமடைந்த அவர் ஒரு வாரகாலம் வீட்டை விட்டே வெளியே போகக்கூடாது என்று தடை போட்டுவிட்டார். இந்த நேரம் தாய் என்ன செய்தார். அவர் எதுவும் செய்யவில்லை. தலையிட பயந்து அமைதி காத்தார்.

இது ஒரு சிறிய உதாரணச் சம்பவம் மட்டுமே. ஆனால் இந்த சிறிய நிகழ்வு மகளின்: வாழ்க்கை முழுவதுமே மறக்க முடியாதவாறு மனதில் ஆழப்பதிந்துவிட்டது. தந்தையார் எப்போதும் சிடுசிடுவென்ற கோபத்துடனும், எரிச்சலுடனும் இருந்தார். அவர் அடிப்படையில் ஒரு குழப்பகரமான பயந்த சுபாவமுள்ள மனிதராக வாழ்ந்தார்.

அதற்கு பதிலாக அவர் தனது எண்ணங்களை சூசனுடன் வெளிப்படையாக பேசியிருந்தால் எத்தனையோ பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம். குடும்பத்திலும், பிள்ளைகளின் எதிர்கால வாழ்விலும் ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவருடைய வாழ்க்கை முறையில் அது இருக்கவில்லை.

கோபக்கார தந்தையிடம் ஒரு மகளாக நான் எப்படி வாழலாம் என்ற கேள்வியைக்கூட கேட்க முடியாதிருந்தது என்கிறார் சூசன்.

இப்படித்தான் உங்கள் மீதும் நீங்கள் வளர்ந்த காலம் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆகவேதான் கடந்த காலத்தை ஏற்றுக்கொள்..! இன்றே அதை மறந்துவிடு..! உனது வருங்கால வாழ்க்கையை அதே குறைபாடுகளுக்குள் சிக்க வைக்காமல் மாற்றம் செய்.

அப்படி மாற்றம் செய்யத் தயாரானால் இக்கணத்தில் இருந்து பின் வரும் விடயங்களை கவனத்தில் கொள், இந்தக் காரணங்களை மாற்றிக் கொள்.

01. அளவுக்கு அதிகமான மரியாதையை எதிர்பார்க்கும் பழக்கம்
02. கடும் தூய்மைவாதப் போக்கைக் கடைப்பிடித்தல்
03. பயம் பீதி சுமந்த வாழ்வு
04. குற்ற உணர்வை மனதில் சுமந்து வாழ்தல்
05. சாத்தியமாக்க முடியாத விடயங்களை எண்ணுதல்
06. முடிவு எடுக்க பயப்பிடல்
07. கட்டாயப்படுத்துதல்
08. மிகைப்படுத்தி யோசித்தல்

இவைகள் உன்னிடமிருந்தால் இவை உன் வாழ்க்கைக்குள் பிரச்சனைகளை கொண்டு வரும். இவை தவிர பின்வரும் விடயங்கள் உன்னை வாட்டினால் அவற்றையும் மாற்றிக் கொள்ள தயங்காதே.

01. விமர்சனங்களை ஏற்க முடியாது உணர்ச்சிவசப்பட்டால்
02. சந்தேகம் கொள்ளும் பழக்கம்
03. மற்றவர்களின் பிரச்சனைகளை துச்சமாக மதித்தல்
04. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அஞ்சி அஞ்சி வாழ்தல்
05. கடும் சுகயீனம் வந்தால் அமைதி குலைவடைதல்
06. எதிர்காலத்தில் ஏதாவது தவறாக நடந்துவிடலாம் என்ற அச்சம்.

இந்த விடயங்களை சுமந்து நிற்கும் ஒருவர் வாழ்க்கையை மகிழ்வோடு நகர்த்த இயலாது.

இதுமட்டுமல்ல நமது வாழ்க்கை என்பது யானையை பார்த்த குருடர்களைப் போல சமுதாயத்தால் உற்று நோக்கப்படுகிறது.

கூர்ந்து அவதானித்தால் நமது வாழ்க்கை பற்றியும், அதன் எதிர்பார்ப்புக்கள் பற்றியும் அவரவர் கோணத்தில் இருந்து கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவைகள் பார்வைகளும், எதிர்பார்ப்புக்களும் உன்னைப் பாதிக்கின்றது.

அவர்கள் நினைத்தபடி உன்னால் வாழ முடியுமா..?

அவர்கள் வளர்ந்த விதத்திற்கு அமைவாக உருவாக்கி வைத்திருக்கும் அச்சுக்களில் நீ உன் வாழ்க்கையை சாறாக பிழிந்து ஊற்றத்தான் முடியுமா..?

அவர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல நீ இல்லை. ஆகவே இந்த நேரம் நீ என்ன செய்யலாம்..? ஒரே வழிதான் இருக்கிறது. அது உன் வாழ்க்கையை நீயே பொறுப்பெடுப்பதுதான்.

மற்றவர்களால் பார்க்கப்படும் பார்வையும், எதிர்பார்ப்பும் உன் அடையாளத்தை தடுப்பதாக இருந்தால் அதைத் தூக்கி எறிந்துவிடு, ஒருபோதும் மற்றவருக்காக வாழாதே.

நீ எப்படி வாழ வேண்டும் என்பதை நீயே முடிவு செய்ய வேண்டும் இதை பல தன்னம்பிக்கை நூல்கள் கூறிவிட்டன.

அப்படி சுதந்திரமாக சுயமாக நீ செய்வாயாக இருந்தால் உன் வாழ்வில் பல சந்தோஷமான முக்கியமான மாற்றங்களை நிகழ்த்தலாம்.

அதேவேளை இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பல குறைபாடுகளை திருத்திய நீ அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டியதில்லை. நீ அறிந்த இந்த விடயங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை புரிந்து கொள்.

குறைபாடுகளை திருத்துவது வேறு தார்மீக கோபம் கொள்வது வேறு.. இரண்டையும் ஒன்றாகக் கலந்துவிடக்கூடாது.

நீங்கள் உங்கள் பெற்றோருக்கு எவ்வளவு நன்றி உடையவர்களாக இருக்கிறீர்களோ அவ்வளவுக்குத்தான் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்பர்.

குனிலா ஹவுக்லுண்டா
மேலைத்தேய ஆய்வாளர்.

கி.செ.துரை 21.01.2019
தொடரும்..

Related posts