வடக்கு மாகாணத்தில் புதிய தமிழ் ஆளுநர் அதிரடி மாற்றங்களுக்கு தயாராகிறார்

– பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால், அரசியலமைப்பை மீறியதாக கருத முடியாது!

– மூன்று மாதத்தில் வடக்கின் அனைத்து பெயர்ப்பலகைகளும் மும்மொழியில்

– கல்வித் தரத்தை உயர்த்த அதிரடிக்குழு

– ஊழலையும் போதைப்பொருளையும் ஒழிக்க கடுமையான நடவடிக்கை

– தமிழர்கள் அனைவரும் பொதுவான விடயத்தில் ஒன்றுபட வேண்டும்

– நான் எந்தவோர் அரசியல் கட்சியையும் சார முடியாது

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவது அரசியலமைப்பை மீறும் குற்றமாக அமையாது என்றும் தமிழ் மக்கள் சிறு சிறு கருத்துபேதங்களைப் புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட வேண்டுமென்று அழைப்பு விடுப்பதாகவும் கூறுகிறார் வட மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன். கல்வித்தரத்தில் ஒன்பதாவது மாகாணமாக விளங்கும் வட மாகாணத்தைக் கட்டியெழுப்புவது தமது முக்கிய பொறுப்பாகும் என்றும் கூறுகிறார்.

மாகாண சபை வரலாற்றில் முதற்தடவையாக வட மாகாணத்திற்கு ஒரு தமிழரை ஆளுநராக ஜனாதிபதி நியமித்திருக்கிறார்.

யார் இந்த சுரேன் ராகவன்?

“வெளிநாடு சென்று கலாநிதி பட்டம் வரையில் படித்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலே பௌத்த மதத்திற்கான ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி, அந்த நிலையத்தில் உப தலைவராக இருந்துகொண்டு இருக்கின்றேன். அந்த நிலையில்தான் எனக்கு ஜனாதிபதியுடன் தொடர்பு ஏற்பட்டது. இனவாதத்திற்கு எதிரான அவரின் செயற்பாடுகள், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அவரின் முயற்சி, கொள்கைகள் என்னைக் கவர்ந்தன. அதனால் அவருடன் இணைந்து பணியாற்றலாம் என்றிருந்தேன். முன்பு அவரின் அரசியல் ஆலோசகராக இருந்தேன். அப்போது அவர் சொன்னார், நடுநிலை கொண்ட ஒருவரை வட மாகாணத்திற்கு ஆளுநராக அனுப்ப வேண்டும், மாகாண சபை உருவாகி முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னமும் முழுத் தமிழர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்று. எனக்கு முன்பு இருந்த றெஜினோல்ட் குறே, ஒரு சிங்களவராக இருந்தாலும், தமிழும் கதைக்கக்கூடியவர். அதனால், அவரை நியமித்திருந்தார்கள். அவர் எந்த நிலையில் இருந்து மக்களுக்குப் பணி புரிந்தார் என்று மக்களுக்குத் தெரியும். அவர் மக்களின் அபிமானத்தையும் வென்றார். அதன் பிறகு ஒரு முழுத் தமிழராக நான்தான் நியமிக்கப்பட்டுள்ளேன். இது தமிழ் மக்கள் பெற்ற வெற்றி என்றுதான் நான் சொல்வேன்; எனது தனிப்பட்ட வெற்றியல்ல.

ஏனெனில், பிள்ளைகள் காணாமற்போன தாயின் குரலின் தொனி மட்டுமல்ல. அந்த வேதனையைக்கூட உணரக்கூடிய தமிழனாக நான் இருக்கின்றேன். எனவே, நான் எடுத்துள்ள இந்தப் பொறுப்பில் குறுகிய காலத்திற்குள்ளேனும் நிறைவேற்றக்கூடியவை அநேகம் உண்டு.”

கேள்வி: ஓர் அரசியல் பின்புலம் இல்லாமல், திடீரென ஒரு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: இந்தக் கேள்வி எனக்கு அப்போது வந்தது. அங்கு இப்போது மாகாண சபை நடக்கவில்லை.ஆகையினாலே, ஒட்டுமொத்த பொறுப்பும் ஜனாதிபதியின் கரங்களில் உள்ளது. அவருடைய நேரடியான பிரதிநிதி என்ற வகையில்தான் நான் இப்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றேன். மாகாண சபை இல்லாவிட்டாலும், வட மாகாணத்தைப் பொறுத்த வரையில் விடயமறிந்த; மக்களை நேசிக்கின்ற பொறுப்பதிகாரிகள் அநேகர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைக்கூடக் கைவிட்டுவிட்டுத் தங்களுடைய நாட்டிலிருந்து மக்களுக்காகத் தங்களுடைய தேசத்திற்காகப் பணிபுரியக்கூடிய ஓர் அர்ப்பணிப்பான குழு கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து பொறுப்புகளை நிறைவேற்றலாம் என்றிருக்கின்றேன். நான் பொறுப்பேற்று ஒரு வாரம்கூடப் பூர்த்தியாகவில்லை, அதற்குள் உடனடியாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்ைககளை மேற்கொண்டிருக்கின்றேன். நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள், இரணைமடுவில் வான்கதவுகள் திறக்கப்படாமல் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கக்கூடுமோ என்ற ஓர் ஐயப்பாடு இருக்கிறது. அதுபற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு விசாரணைக் குழுவொன்றை உடனடியாக நியமித்திருக்கின்றேன். அந்த விசாரணைக்குழு 21நாட்களுக்குள் தனது ஆய்வுகளை எனக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்தது, எதிர்வரும் மூன்று மாதகாலப் பகுதியில் முழு வட மாகாணத்திலும் எல்லாப் பெயர்ப் பலகைகளும், அரச நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்ைக எடுக்கவிருக்கின்றோம். குறைந்தது தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலுமாவது பெயர்ப்பலகையைக் காட்சிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றேன். இஃது ஏனெனில், தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்லும் மக்களுக்கும் வட மாகாணத்தில் வாழும் மக்களுக்கும் தேவையான விடயமாக உள்ளது. மொழி அடிப்படையான உரிமையாகும். எங்களுடைய நாட்டிலுள்ள பிரச்சினை மொழி அடிப்படையில்தான் 1956இலிருந்து வளர்ந்து வந்திருக்கிறது. ஆகவே, அதனை நிறைவேற்றும் பணியைச் செய்துகொண்டிருக்கின்றேன். கிடைக்கின்ற குறுகிய காலத்தில் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து எமக்குக் கரிசனை இருக்கிறது. மொழிக்கு அடுத்தபடியாக வட மாகாண மக்களின் அபிமானமாக இருப்பது கல்வி. ஆனால், போருக்குப் பின்னரான சீரழிவினால், தமிழ் மக்கள் இந்த நிலையில் இருந்து ஒன்பதாவது மாகாணம் என்ற நிலைக்கு மாறியிருக்கிறார்கள். இஃது ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் இலங்கையருக்கும் கவலையளிக்கும் விடயம். எனவே, கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு ஓர் அதிரடிக் குழுவை அமைத்து எல்லாக் கட்சிகளும் எந்தவிதக் கட்சி சார்பும் இல்லாமல், ஒன்று சேர்ந்து பணியாற்றி இந்த நிலையை மாற்றுவதற்காகத் துரித நடவடிக்ைகயை எடுப்பதற்கு முயற்சி எடுத்துக்ெகாண்டிருக்கின்றோம்.

அடுத்ததாக விவசாயம். உங்களுக்குத் தெரியும், வட மாகாணம் என்பது 1980வரையில் முழு இலங்கையிலும் 60%விவசாய உற்பத்தியைக் கொண்டதாக இருந்தது. எமது கலாசாரம் விவசாயக் கலாசாரம். விவசாயத்துடன் கலந்த ஒரு வாழ்வியலாக இருந்தது. அஃது இப்போது சீரழிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்படும். அத்தோடு சம்பந்தப்பட்டதுதான் நீர்ப்பாசனம். ஆகவே, வட மாகாணத்தில் உள்ள எல்லாக் குளங்களும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், மாகாணத்திற்குக் கிடைக்கக்கூடிய எல்லா உரிமைகளையும் நடைமுறைப்படுத்துவதற்குத் துறை சார்ந்த அமைச்சுடன் இணைந்து செயலாற்றவிருக்கின்றோம்.

நான்காவது, ஐந்தாவது பிரச்சினையாக இருப்பது போதைப்பொருளுக்கு எதிரான போர். போருக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாரிய அழிவு போதைப்பொருள். யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டத்திலும் போதைப் பொருள் பயன்பாட்டையும் கடத்தலையும் முற்றாக ஒழிப்பதற்கு அதிரடியான குழுக்களை அமைத்து நடவடிக்ைக எடுக்கப்படும். போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பைக் கண்டறிந்து அதனை முற்றாகச் செயலிழக்கச் செய்வோம்.

மற்றையது ஊழல் ஒழிப்பு. தற்போது மாகாண சபை இயங்காததால், ஊழல் ஒரு புற்றுநோயைப்போல உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவியிருக்கிறது. ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் புரிவோர் எவராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: ஜனாதிபதியின் கொள்கைகள், செயற்பாடுகள் பிடித்துக் கொண்டதால், இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறீர்கள், அரசியல் கட்சிகளுடனான உங்களின் தொடர்பு எவ்வாறிருக்கிறது; அவர்கள் உங்களின் நியமனத்தை அங்கீகரித்திருக்கிறார்களா?

பதில்: இதுவரையில் நான் இரா.சம்பந்தன் அவர்களைச் சந்தித்தேன். கூட்டமைப்பின் புத்திஜீவியாக வாழ்ந்துகொண்டிருக்கும் எம்.ஏ.சுதந்திரனைச் சந்தித்தேன். இதன்போது ஆழமான நட்புக்குப் பாத்திரமான பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினோம். அதற்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இராமநாதனைச் சந்தித்தேன். எந்தவோர் அரசியல் கட்சியையும் சாராமல், தமிழ் மக்களுக்காகப் பாடுபடுவேன்; உழைப்பேன் என்ற எனது கொள்கையை அவருக்கு எடுத்துரைத்தேன். தவிரவும், வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களையும் சந்தித்தேன். அவருடனான சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைப் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக்ெகாள்ளக்கூடியதாகவிருந்தது. அவர் முழு மனநிறைவுடன் என்னிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

கேள்வி: பௌத்த மதத்தை ஆய்வுசெய்தவர் என்ற வகையில், வடக்கிற்கும் தெற்கிற்கும் பாலம் அமைக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள், எப்படி அதனை நடைமுறைப்படுத்தப்போகிறீர்கள்?

பதில்: நான் நினைக்கின்றேன், எங்களுடைய மக்களின் அடிப்படை அபிலாஷைகள், அது மாத்தறையாக இருந்தாலும் யாழ்ப்பாணமாக இருந்தாலும் ஒன்றுதான். எல்லோருடைய அபிலாஷைகளும் சமமாகவே இருக்கின்றன. சாதாரணமாக வாழவேண்டும், சரளமாக வாழவேண்டும், தங்களுடைய பிள்ளைகள், தங்களுடைய வாழ்க்ைகயைவிட உயரத்தில் வைக்க வேண்டும் என்பதுதான். அதற்குத் தெற்கில் பௌத்த மதம் எந்தளவிற்கு உதவியிருக்கின்றதோ, வழிகாட்டியாக இருந்திருக்கின்றதோ, வடமாகாணத்திலும், ஏனைய மாகாணத்தில் இந்து மதமும் கிறிஸ்தவ மதமும் அதேயளவு பங்காற்றியிருக்கின்றது. ஆகவே, அந்த மதங்களில் இருக்கும் அடிப்படை உரிமைகளை அல்லது உண்மைகளை நோக்கும்போதும் கலாசாரங்களைப் பார்க்கும்போதும் இரண்டுக்கும் எவ்வளவோ ஒற்றுமைகள் இருக்கின்றன. நாங்கள் பரிமாறிக்ெகாள்ளும் மொழியில்கூடப் பரஸ்பரம் கலவை இருக்கிறது. தற்போது பயன்படுத்தப்படும் சிங்கள மொழியில் குறைந்தது 30%தமிழ் கலந்திருக்கிறது. அது பரணவிதாரனவிலிருந்து சொல்லப்படுகின்ற விடயம். ஆகவே, இந்தப் பாலங்கள் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தன என்பதே உண்மை. அவை, தற்செயலாக, தற்காலிகமாக உடைக்கப்பட்டிருக்கின்றன; அல்லது சரிந்திருக்கின்றன. இராமாயணத்தில் இராமர் கடந்துசெல்வதற்கு அணில் வந்து வாலைக்ெகாடுத்ததைப்போன்று நான் செய்யும் பணி சிறியதாகவிருக்கலாம்.ஆனால், தர்மமும், நீதியும் நியாயமும் எங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

கேள்வி:கடந்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் சரி, பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளுநர்கள் தடையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. நீங்கள் சொல்கிறீர்கள், அதிகாரத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று. சிலவேளை, தமிழர்கள் முதலமைச்சராக இருப்பதைவிட ஆளுநராக இருப்பதன் மூலம் கூடுதலாகப் பணியாற்றலாம் என்கிறீர்களா?

பதில்: (சிரித்தபடி) அது ஓர் அரசியல் வாய்ப்பு சார்ந்த விடயமாக இருக்கிறது. மாகாண சபை இருக்கும்போது அந்த அதிகாரம் பகிர்ந்துகொள்ளப்படுகின்றது. இதில் மூன்று அடுக்குகள் (Layers) இருக்கின்றன. முதலாவது அரசு, இரண்டாவது மாகாணம், மூன்றாவது அடிப்படை. தற்போது மாகாண சபை இல்லாத நிலையில் அஃது ஒரு நேர்கோடாக இருக்கிறது. இது தொடர்ந்து வைத்துக்ெகாள்ளக்கூடாத ஒரு முன்மாதிரி என்றும் சொல்வேன். தற்போது ஏற்பட்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்திற்கூடாக, நாங்கள் பெறக்கூடிய நன்மைகள் என்னவென்றால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எந்தவோர் அரச அதிகாரியும் தற்போது இருக்கின்ற அரசியல் வாய்ப்பைத் தான் பின்பற்றுவதாகவே உறுதிமொழி வழங்குகிறார். அவ்வாறு அரசியல் வாய்ப்பைக் கட்டிக்காப்பேன் என்றுதான் நானும் உறுதிமொழி; வாக்குறுதி கொடுத்துள்ளேன். அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் இருக்கிறது. அதிலுள்ள வாய்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால்தான் நான் அரசியலமைப்பை மீறுபவனாக இருப்பேனேயொழிய, பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்போது நான் அரசியலமைப்பை மீறுவதாக அமையாது என்பதே என்னுடைய கருத்து.

கேள்வி: முதல் தடவையாக வடக்கிற்குத் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே, வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன, அடுத்த கட்ட நகர்வுக்குத் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: நான் வெளியில் இருந்து ஒரு தமிழனாக நிலைமைகளை அவதானித்துக்ெகாண்டிருந்தவன் என்ற அடிப்படையில் சொல்வதாக இருந்தால், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற பாரிய, ஆழமான குறைபாடு என்று சொல்லப்போனால், அவர்களிடத்தில் ஒற்றுமையின்மை. கட்சி ரீதியாக, தனிப்பட்ட ரீதியாகத் தமிழர்கள் எவ்வளவுக்ெகவ்வளவு இயலுமோ,, அந்தளவிற்குப் பிரிந்திருக்கிறார்கள். அது பிரதேச வாதமாக, அரசியல் வாதமாக, தாம் சார்ந்த குழு சார்பாக, தாம் படித்த பாடசாலை என்பதற்காக, அடிப்படை கொள்கை ரீதியாகப் பிரிந்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் ஒன்றுசேர வேண்டும்; ஒற்றுமைப்பட வேண்டும். ஒன்று சேர்ந்தால்தான் எங்களுக்கு வாழ்வு உண்டு என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். சிலவேளை, நூற்றுக்கு நூறு வீதமும் யாருடனும் எங்களுக்கு ஒத்துப்போக முடியாத நிலை இருக்கலாம். ஆனால், நாங்கள் அடிப்படை ரீதியாக, எங்கள் உரிமைகளையும் உறவுகளையும் உண்மையாக கலாசாரத்தையும் பேண வேண்டும் என்றால், நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதேநேரத்தில், இரண்டாவதாக, தமிழ் மக்களின் கலாசாரத்தில் பாரிய ஓர் அம்சமாக இருந்தது கடின உழைப்பு! தொலைதூரத்தில் உள்ள ஆழமான கிணறுகளிலிருந்து நீர்பாய்ச்சி, கமம் செய்து; தங்களின் பிள்ளைகளைப் பாடசாலைக்கும் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பிய ஒரு கலாசாரம் எங்களுடையது. இப்போது கடின உழைப்புக்குப் பதிலாக, அபிவிருத்திக்ெகன்று இன்று தமிழ் மக்கள் சென்று கொண்டிருக்கும் பாதை கவலைக்குரியது. அபிவிருத்தி என்பது என்ன? வீட்டில் நாலு வாகனங்களும் மதில் உள்ள ஒரு வீடும்தானா? அல்லது தமிழ் கலாசாரத்துடன் ஒத்தியங்கக்கூடிய , சரளமான, உண்மையான தர்மத்திற்கு ஏற்ப வாழ்வதுதான் அபிவிருத்தியா? என்ற கேள்வி சமூக ரீதியில் ஒரு சம்பாஷணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓர் ஏகப்பிரதிநிதி என்ற நிலையைத் தக்க வைத்துக்ெகாண்டிருக்கிறது. வடக்கு மக்களுக்கு அபிவிருத்தியை விட உரிமைதான் முதலில் வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கூறியிருந்தார். இந்தப் பின்னணியில், உங்களுடைய செயற்பாடு எவ்வாறு அமையப்போகிறது?

பதில்: நான் ஓர் அரசியல் கட்சியைச் சார முடியாது. நான் அரசைச் சார்ந்தவன். ஆகவே, மாகாணத்திலோ, தேசிய ரீதியிலோ எந்தக் கட்சியையும் நான் சாரமுடியாது. நான் வட மாகாண முன்னாள் முதலமைச்சருடனும் கலந்துரையாடியிருக்கின்றேன். அரசியல் விஞ்ஞான வியாக்கியானத்தின் அடிப்படையில், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

அந்தச் சிறிய விடயத்தைக் கைவிட்டுவிட்டு மேலோட்டமாகத் தமிழ் மக்களின் நன்மை என்ற பொதுவான விடயத்தில் ஒன்றுசேர முடியும்; ஒன்றுசேர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

(விசு கருணாநிதி)

Related posts