பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல. ஜனநாயக வழிமுறைகளைக் கையாள வேண்டுமென்று ஜனநாயக தன்மையை கைக்கொண்டவர். அத்தோடு, தனது காலத்திற்குள் ஒரு தீர்வினை அடைய வேண்டுமென்று எண்ணியவர் பிரபாகரன் என்பதைப் போன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக வடமாகாண சபை முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (04) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது சீ.வி.கே.சிவஞானம் இவ்வாறு கூறினார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை விருப்பவில்லை, அதனால் தான் கட்சி தலைவர்களையும் கொலை செய்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறியிருந்தார்.

அவரின் கருத்து தொடர்பில் கேட்டபோதே சீ.வி.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை சந்திப்பதற்கு என்னைத் தெரிவு செய்து அனுப்பியிருந்தார்.

நாங்கள் தினமும் சண்டை பிடித்துக்கொண்டிருக்க முடியாது. பாராளுமன்ற அரசியலிலும் ஈடுபட வேண்டிய தேவை இருக்கின்றது. அந்தவகையில் ஜனநாயக வழிமுறைகளையும் முன்னெடுக்க வேண்டுமென்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஜனநாயக தன்மையை எப்போதும் கைக்கொண்டவர்கள். அதனால் தான் ஒவ்வொரு கிராம அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. ஜனநாயகத்திற்கு விரோதமாக விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலும் இருக்கவில்லை.

தமிழரசு கட்சியில் இருக்கும் சிலர் அந்தக் காலங்களில் இருந்தவர்கள் அல்ல. இடைவெளிகள் இருக்கின்றன. 20 வருட இடைவெளிகள் இருக்கின்றன. தமிழரசு கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் அல்ல.

உண்மைகள் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. ஏனெனில், அந்தக் காலத்தில் இருந்து அதற்குள்ளேயே வாழ்ந்தவன். சவால் விடுக்க முடியாது. கட்சித் தலைவர்கள் கொலை செய்யப்பட்டது நடக்கவில்லை என சொல்லவில்லை. சில கொலைகள் நடந்திருக்கின்றன.

அது யதார்த்தம், உண்மை, அதற்குரிய காரணங்கள், காரியங்கள் புலிகள் தான் சொல்லியிருக்க வேண்டும். அது எனக்குத் தெரியாது. அமிர்தலிங்கத்தை கொலை செய்தது தவறு என மாத்தையா போன்றவர்களுக்குச் சொன்னவன் நான். ராஜிவ் காந்தியை கொலை செய்துத தவறு என சொன்னவன் நான். சில தவறுகள் நடந்திருக்கின்றன. அவை இல்லை என மறுப்பதற்கு இல்லை.

மக்கள் புரிந்துகொள்வார்கள். சிலரைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் தற்போது தான் அரசியலுக்கு வருகின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய காலத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தவர். அதேபோன்று தான், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது காலத்திற்குள் தீர்வு கிடைக்க வேண்டுமென்று முயற்சி செய்கின்றார். அதை மதிக்க வேண்டுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts