இந்த ஆண்டு புயலடித்த உலகம் என்ற பட்டப் பெயருடன் விடை பெறுகிறது.

கடந்து போகும் 2018ம் ஆண்டு பத்து பெரிய புயல்களினால் உலகம் தாக்கப்பட்ட ஆண்டாக இருக்கிறது. 1997 ம் ஆண்டுக்கு பின்னர் அதிகமான பெரும் புயல்கள் வீசிய ஆண்டாகவும் இருக்கிறது.

பெரும் புயல் அல்லது சூப்பர் புயல் என்றால் என்ன..? எல்லாமே புயல்தானே என்று கருதிவிடக்கூடாது. புயலின் அழிவு, புயல்கண்ணில் காற்றின் வேகம், கொட்டும் மழை போன்றன அசாதாரணமாக இருக்க வேண்டும். மணிக்கு 290 கி.மீ வேகத்தில் பாய்ந்து வரும் புயல்கள் தரம் 5 என்று மதிப்பிடப்படுகிறது.

பொதுவாக புயலின் தரம் 4 என்றாலே ஆபத்துத்தான், போதாக்குறைக்கு அது சன்னதமேறி 5 வது படிநிலைக்கு போனால் அவ்வளவுதான், முழு இடங்களையும் பரிநாசம் செய்துவிடும். உதாரணம் இந்த ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிலிப்பைன்சில் அடித்து நொருக்கிய மங்குட் சூறாவளி 134 பேரை கொன்று தள்ளியதே அது.

அதுபோல ஜப்பானில் அடித்த ஜெபி, த்ரமி ஆகிய இரண்டு பெரும் சூப்ப சூறாவளிகள் முறையே 17 – 4 பேரை கொன்று தள்ளியது.

கடந்த 21 வருடங்களில் இல்லாதளவுக்கு இந்த ஆண:;டு படிநிலை தரம் 5 கொண்ட சூறாவளிகள் தனது கோரப்பற்களால் உலகை அதிக அளவில் வேட்டையாடியுள்ளன. இதற்கு அமெரிக்காவும் பலத்த விலைகளைக் கொடுத்துள்ளது.

எதற்காக வேகம் கொண்ட சூறாவளிகளை கடல் அடிக்கடி பெற்றுத்தள்ளுகிறது என்ற கேள்விக்கான முக்கிய பதில், புவியின் கடற்பகுதி மோசமாக வெப்பமாகிறது என்பதே.

கடல் வெப்பமாக காற்று விரிவடையும், அதன் பாரம் குறைய மேலே கிளம்பும், அப்போது அது இருந்த இடம் வெற்றிடமாகும், அங்கு தாழமுக்கம் உருவாகும். அந்த வெற்றிடத்தை நோக்கி 360 பாகைகளில் இருந்தும் காற்று உள்ளே இறங்கும், அது ஒன்றை ஒன்று மோதி பம்பரம் போல சுழல சூறாவளி கண் உருவாகும். அந்தோ அதிலிருந்து ஓர் இசைத்தட்டு போல காற்று சூழல ஆரம்பிக்கும்.

அடுத்து என்ன நடக்கும்.. அது நிலை தடுமாறி உடைப்பெடுக்கும். அந்தோ மகாவிஷ்ணுவின் சக்கராயுதம் போல சூழன்று பறக்க ஆரம்பிக்கும், அத்தருணம் அது அதிக வேகமெடுத்தால் சூப்பர் ஸ்டார் போல சூப்பர் சூறாவளியாக மாறும்.

மாறினால் என்ன நடக்கும் என்கிறீர்களா..?

இப்போது பிலிப்பைன்சில் ஆறு பிராந்தியங்களில் புயல் அடித்து பிளந்து கொண்டிருக்கிறது. இதுவரை 20 பேர் மரணித்துவிட்டார்கள், 5000 பேர் வாழிடங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
இன்றய மண்சரிவில் அல்பே என்ற இடத்தில் உண்டான மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் உறக்கத்தில் இருக்க மண்ணால் மூடப்பட்டனர் போதுமா..?

பிலிப்பைன்சின் முக்கியமான தீவுகளில் ஒன்று மிண்டானோ தீவாகும், இங்கு உலகின் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். மொத்த மக்கள் தொகை இருபது மில்லியன்களாகும்.

இந்தத் தீவில் புயலின் கைவரிசை நேற்று ஆரம்பித்தது. சுனாமி, மழை, நிலநடுக்கம், சூறாவளி, மண்சரிவு என்று இப்பகுதி மக்கள் இயற்கையுடன் நடத்தும் போராட்டங்கள் சொல்லும்தரமன்று.

இதற்கு அருகில் உள்ள இந்தோனீசியா நாடும் சென்ற வாரம் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. இங்குள்ள எரிமலை அனாக் கிராக்கற்றம் என்பது கக்கியதில் சுனாமி உண்டானதும் அதில் 426 பேர் மரணித்ததும், மேலும் 150 பேர் தேடப்படுவதும், 10.000 பேர் வீடுகளை இழந்ததும் தெரிந்ததே.

இந்த எரிமலையின் லாவா குழம்பு 150 முதல் 180 மில்லியன் கன மீட்டர் அளவுக்கு குழம்மை கக்கி லொதக்கென கடலில் தள்ளியுள்ளது. இதனால் கொதித்து சீறிய அலைகள் சுனாமியாக மாறியுள்ளன. தண்ணீர் சட்டிக்குள் தணலை கொட்டினால் என்ன நடக்கும்.. அதுதான் நடந்தது. கக்கின கக்கில் 338 மீட்டர் உயரம் கொண்ட எரிமலை இப்போது 110 மீட்டர்களாக உயரம் குறைந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது.

இது போல அமெரிக்காவில் உண்டான காட்டுத்தீ, சிரியாவின் வெள்ளப்பெருக்கு என்று இயற்கை அனர்த்தங்கள் அகோரமாக தலைவிரித்தாட புவியின் வெப்ப அதிகரிப்பு முக்கிய காரணம் என்று சொன்னால் மேலை நாடுகள் கேட்பதாக இல்லை. அது போல கீழை நாடுகளும் கேட்க மறுக்கின்றன. புவியை அழிப்பதில் இருவருக்கும் பேதங்கள் இல்லை.

அழிவில் இருந்து உலகை பாதுகாப்பதைவிட, அழிந்த பின் பார்ப்போம் என்ற அறிவு மங்கிய உலகில் வாழும் மக்கள் படும் துயரம் இப்படித்தான் இருக்குமோ..?

இதற்கு தனியே தலைவர்கள் மட்டும் காரணமல்ல அவர்களைவிட, ராமன் ஆண்டால் எனக்கென்ன ராவணன் ஆண்டால் எனக்கென்ன என்ற மக்களும் முக்கிய பாத்திரவாளிகளே.

யுகங்கள் தோறும் நான் பிறக்கிறேன்
தர்மம் அழிவெய்தும் காலத்திலும் பிறக்கிறேன்..
இயற்கை பேரழிவுகள் இப்படியான பிறப்புக்களோ யாரறிவார்.!

அலைகள் 30.12.2018 ஞாயிறு

Related posts