நாடு பூராகவும் சுனாமி நினை வேந்தல் நிகழ்வுகள்

சுனாமி பேரலை ஏற்பட்டு 14 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (26) நாட்டின் பல பாகங்களிலும் நினைவு கூறப்பட்டுள்ளது.

சுனாமி பேரலையில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார், பள்ளிமுனை லூசியா ம.வி பாடசாலையில் இன்று காலை 9.25 மணி அளவில் தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன் வடமராட்சி கிழக்கு – உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இந்நிகழ்வுகள் உறவுகளை இழந்த மக்களுடைய கண்ணீருடன் உணா்வு பூா்வமாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800 க்கும் மேற்பட்டவார்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 8.55 மணி அளவில் மட்டக்களப்பு கல்லடி டச்பார், திருச்செந்தூர், நாவலடி ஆகிய பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்கள் நடைபெற்றன.

திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

இதேவேளை, சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 14 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

ஹட்டன் பொலிஸார் நகர வர்த்தகர்கள் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள், ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் எஸ்.பாலசந்திரன், உறுப்பினர்கள் என அனைவரும் இதில் கலந்துக்கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்டு உயிர்நீத்த உறவுகளின் 14 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேலும், வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 8.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலய வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

Related posts