வடக்கில் மழை வெள்ளம்; மீட்பு பணியில் இராணுவம்

கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ் குடாநாட்டு பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

நேற்று (22) முதல் பெய்து வரும் மழை காரணமாக சுமார் 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

சில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை இராணுவத்தினர் இறக்கப்பட்டு மீட்கும் பணிகளில் ஈடுப்பட்டதோடு படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகள் வியாபார நிலையங்கள் என்பவற்றுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதனால் மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

தொடரும் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்காக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டன.இதனால் தாழ்நிலப் பகுதி மக்களை அவதனாமாக இருக்குமாறு கிளிநொச்சி பிராந்தியம் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் கடும் மழை காரணமாக வட்டக்கச்சி மாவடியம்மன் புன்னைநீராவி பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கனகராயன் ஆற்று படுக்கை பன்னங்கண்டி முரசுமோட்டை ஐயன்கோவிலடி பளையவட்டக்கச்சி பெரியகுளம் வெளிக்கண்டல் கண்டாவளை ஊரியான் பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுகுளத்தின் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம 25.5 அடி காணப்படுவதால் கலிங்கு ஊடாக வான் 1.5 அடி பாய ஆரம்பித்துள்ளது.

எனவே அக்குளத்தை அண்டிய அண்டிய மக்கள் மிகஅவதானமாக இருக்குமாறு கேட்கப்படுகின்றனர்.

அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது.மழையுடனான காலநிலையின் போது சில பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படுகிறது.கடும் மழை காரணமாக வீதிகளிலும்இ தாழ்வான பகுதிகளிலும் மழை வெள்ளநீர் காணப்படுகின்றது.

யாழ் வடமராட்சிக் கிழக்கு பகுதியில் கடந்த இரு நாட்கள் பெய்த கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறிப்பான உடுத்துறை ஆழியவளை மணற்காடு உள்ளிட்ட பகுதியில் மழை காரணமாகவும் வெள்ளப் பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன.

இவ் வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அநேகமான மக்களின் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. சில இடங்களில் வீதிகளில் நீர் தேங்கி உள்ளமையினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் வீதிகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பயிரிடப்பட்ட விவசாயப் பயிர்களும் முற்றாக அழிவடைந்துள்ளன.

கிராமங்களில் கடற்கரையோரமாகக் காணப்படுகின்ற வாய்க்களால் ஊடாக வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வெள்ளப்பாதிப்பை குறைக்க தொண்டமானாறு ஏரி வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

மாங்குளம் ஏ9 வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் பாதிப்படைந்தது.கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மல்லாவி கற்குவாரிக் குளம் உடைப்பெடுக்க இருந்த நிலையில் நீர் தாழ் நிலத்தை நோக்கி வெட்டி விடப்பட்டது.

இக்குளத்தில் இருந்து வெளியேறிய நீர் ஏ9 வீதியில் மாங்குளம் சந்தியை ஊடறுத்தது. இதன்காரணமாக மாங்குளம் சந்தியில் வெள்ள நீரால் ஏ9 வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் பாதிப்படைந்ததுடன் அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.

கற்குவாரி குளத்து நீர் வெளியேற்றப்பட்டமையால் கற்குவாரியடி மற்றும் மாங்குளம் பகுதிகளைச் சேர்ந்த 55 குடும்பங்கள் பாதிப்படைந்தது இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்த மக்கள். மாங்குளம் மத்திய கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இரவு பெய்த கன மழையால் முல்லைத்தீவின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் முல்லைத்தீவு – குமுழமுனை பிரதான வீதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.இதனால் அவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பலரும் பலத்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மேலும் குமுழமுனை வீதியின் குறுக்காக காணப்படுகின்ற இரு ஆறுகள், இரவு பெய்த கனமழையால் பெருக்கெடுத்து, பாலத்தின் மேலாக மேவிப் பாய்கின்றது. இதனாலேயே அவ்வீதி வெள்ளத்தினால் மூழ்கி காட்சியழிக்கின்றது. இதனால் இவ்வீதியால் செல்லும் மக்கள் பலத்த சிரமங்களுடன் பயணிக்கின்றனர்.

அத்துடன் இவ்விரு ஆறுகளும் பெருக்கெடுத்து பாய்வதால் முறிப்பு பகுதியில் விவசாயம் செய்யப்பட்டுள்ள நெல் வயல்கள், தட்டா வயல் போன்ற வயல் நிலங்களும் நீரில் மூழ்கிக் காட்சியழிக்கின்றன.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கன மழை காரணமாக, மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவின் பாதிப்பு நிலைபற்றி அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் அவர்ளைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

உரிய இடங்களுக்கு அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Related posts