அணு குண்டு போர் ஆரம்பித்தால் மனிதரும் உலகமும் இருக்காது புற்றின் ஆவேசம்

ரஸ்ய அதிபர் விளாடிமிர் புற்றின் வருடந்தோறும் உலக ஊடகவியலாளரை அழைத்து மாநாடு ஒன்றை நடத்தி தனது கொள்கைகளையும், சாதனைகளையும் உலக மக்களுக்கு எடுத்துரைப்பது வழமை.

இந்த நிகழ்வு நேற்று ரஸ்யாவில் இடம் பெற்றது. உலகம் முழுவதும் இருந்து 1700 ஊடகவியலாளர் புடைசூழ கேள்விகளுக்கு பதிலுரைத்தார். மொத்தம் 3 மணி 44 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சி நடந்தது.

அழகிய மேடையிட்டு, கட்டழகிகள் வரவேற்க.. செங்கம்பளம் உருண்டோட.. பணத்தை கொட்டியிறைத்து தனது பெருமையை காட்டும் ஒரு நிகழ்வாக இதை அவர் வருடந்தோறும் நடத்துகிறார். மில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சி மூலமாகக் இதைப் பார்த்தார்கள்.

இத்தருணம் இன்றய உலக நெருக்கடிகள் உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்று உலகில் ஒரு அணு குண்டுப்போர் நடந்தால் என்னவாகும் என்ற கேள்வியாகும்.

இது குறித்து ரஸ்ய ஊடகவியலாளர் ஒருவர், ஐயா.. அணு குண்டு தாங்கிய ஏவுகணைகள் ரஸ்யாவை தாக்க வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ரஸ்ய அதிபர், அமெரிக்கா என்ற நாடு ஒரு வேளை ரஸ்யா மீது அணு குண்டு போரை ஆரம்பித்தால் அது உண்மையாகவே அணு குண்டு போராக இருந்தால் அதற்கு பின் உலகில் மனிதர்களும் இருக்கமாட்டார்கள், பூமியும் இருக்காது என்று கூறியிருக்கிறார்.

அப்படி அவர் கூற காரணம்தான் என்ன..?

அணுப்போர் ஒன்றை தவிர்க்குமுகமாக அமெரிக்காவும் ரஸ்யாவும் ஐ.என்.எப் என்னும் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளன. இந்த ஒப்பந்தமானது அணு குண்டு தாங்கும் நீண்ட தூர ஏவுகணைகளை இரு நாடுகளும் உருவாக்கக் கூடாது என்று கூறுகிறது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை ரஸ்ய அதிபர் மீறிவிட்டார் என்று கூறி அமெரிக்க அதிபர் சில மாதங்களின் முன் வெளியேறிவிட்டார்.

அவ்வாறு அமெரிக்கா ஒரு நாடகம் போட்டு வெளியேறிய உள்நோக்கம் ரஸ்யாவை விட நீண்ட தூரம் அணுகுண்டுகளை தாங்கிப்பறக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா உருவாக்கப்போகிறது, இல்லை உருவாக்கிவிட்டது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அவ்வாறு உருவாக்கிவிட்டு அமெரிக்கா மட்டும் ரஸ்யாவை அணு குண்டுகளால் தாக்க போர்க்கோலம் பூணுமாக இருந்தால்.. அதற்கு பின் நடக்கும் போர் அபாயமானது.. அதன் பின் புவியில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ரஸ்யாவும் தனது குணத்தைக் காட்டிவிடும், அப்படி ரஸ்யா வீறு கொண்டு எழும்பினால் பூமியே இருக்காது என்பது அவருடைய எச்சரிக்கையாக இருந்தது.

ரஸ்ய அதிபருடைய இந்தக் கூற்று மிரட்டலா..? இல்லை உண்மையா..? என்பது தெரியவில்லை. இவர்கள் இருவரும் சந்திரமண்டலத்தில் ராக்கட்டை இறக்கினோம் அங்கே மனிதனை இறக்கினோம் என்று கூறி வருகிறார்கள்.

மனிதனால் சந்திரமண்டலம் இப்போதைக்கு போக முடியாது என்பது தெரிந்து இருவரும் றீல்; விட்டார்கள் என்ற விமர்சனங்களும் உண்டு. அது போல உலகத்தை அழித்துவிடுவோம் என்று றீல் விட்டு பயந்த நாடுகளின் வளங்களை ஏப்பம்விட திட்டமிடுகிறார்களா..? என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.

காரணம் அணு குண்டு வெடித்தால் உலகம் இல்லை என்று மிரட்டுகிறார்கள்.

அணுகுண்டு வெடித்து உலகம் அழியும்வரை அது உண்மையல்ல. உலகத்தை ஏமாற்றி கபளீகாரம் செய்யும் வல்லரசுகள் இதுவரை உலகத்தை ஏமாற்றி அனுபவித்து வருகின்றன. ருசி கண்ட அவர்கள் ஒரு காலமும் உலகத்தை அழிக்க மாட்டார்கள். தங்கள் சந்ததிக்கு உலகத்தை கொடுக்க இதுபோன்ற போலி நாடகங்களை ஆடுகிறார்களா என்பதும் கேள்வியே.

இவ்வளவு பெரும் உயிரினங்கள் கொண்ட அழகிய உலகத்தை உருவாக்கிய இயற்கை அதை முற்றாக அழிக்க அனுமதிக்குமா என்பது கேள்வியே.. அந்த அழிவை ஒரு காலமும் பொறாமை கொண்டு அணுப்போர் நடத்தும் மனிதரிடம் அது ஒப்படைக்காது என்கிறார்கள் இயற்கை நேசர்கள்.

இதற்கு உதாரணமாக…

இப்போது இயற்கையானது காட்டுத்தீ, சுனாமி, பூகம்பமாக மாறி மனித அதிகாரத்திற்கு எதிராக தனது போரை பிரகடனப்படுத்தியிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தார்கள். அமெரிக்க காட்டுத்தீயில் அணு குண்டுகள் அகப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அங்கு கூடியுள்ள 1700 ஊடகவியலாளர்களும் கேட்கவில்லை.

இது குறித்த மேலதிக விபரங்களை கேட்க வேண்டுமானால் இன்றைய உலகச் செய்திகளை கேளுங்கள். ரஸ்ய அதிபரின் பேட்டியை உள்ளடக்கிய மலராக வெளி வந்திருக்கிறது.

அலைகள் 21.12.2018

Related posts