அண்டா குண்டா அடகு வெச்சி படமெடுக்கும் இயக்குநர்!

புதுமுகம் சரண் நாயகனாக நடிக்கும் படம் ‘இது தான் காதலா’. இவர் ‘அரூபம்’ படத்தில் எதிர்மறை நாயகனாக நடித்தவர். நாயகியாக அஷ்மிதா நடிக்கிறார். இவர் ‘சலீம்’ படத்தில் ‘மஸ்காரா’ பாடலுக்கு நடனமாடியவர். இன்னொரு நாயகியாக பெங்களூருவைச் சேர்ந்த ஆயிஷா நடிக்கிறார். சயின்ஸ்ஃபிக்‌ஷன் படமாக உருவாகும் இதில் விஞ்ஞான மனிதனாக படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜசிம்மா நடித்துள்ளார். இவர்களோடு பாலு ஆனந்த், ‘காதல்’ சுகுமார், கூல் சுரேஷ், பயில்வான் ரங்கநாதன், சின்ராஜ், திருப்பூர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா ஆகியோரும் இருக்கிறார்கள். பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர் கணேஷ்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை சங்கர். இவர் ‘குற்றம் கடிதல்’ படத்துக்காக தேசிய விருது பெற்றவர். வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் ராஜசிம்மா. படத்தைப் பற்றி இயக்குநர் ராஜ சிம்மா நம்மிடம் பேசினார்.

‘‘பார்க்காமலேயே காதல், பார்த்தவுடன் காதல், ஃபேஸ்புக் காதல் என்று காதலில் பல வகைகள் இருந்தாலும் காதல் என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்பதை புதிய கோணத்தில் அழுத்தமாகச் சொல்லியுள்ளேன். ஏன்னா, அதுதான் உண்மைக் காதல். படத்தில் காதலுக்கு இருக்கும் முக்கியத்துவம் காமெடி போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கும் இருக்கும். அதே வேளையில் விஞ்ஞான ரீதியாக சில ஹைடெக் விஷயங்களையும் சொல்லியிருக்கேன். நாயகனாக நடிக்கும் சரண் ஏற்கனவே சில படங்கள் பண்ணியிருக்கிறார். சினிமா அனுபவம் உள்ளவர் என்பதால் ஸ்டூண்ட், அட்வகேட் என்று இரண்டு மாறுபட்ட கேரக்டரில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். அதேபோல் ஹீரோயின்கள் இருவரும் வளரும் நடிகைகள். ஆனால் லவ் டிராக், டான்ஸ் மூவ்மென்ட் என்று எதிலும் குறை வைக்காது, கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கினார்கள். கொடுத்த கேரக்டரை முனைப்பாக செயல்படுத்த மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.

படத்தோட ஹைலைட்டாக குரங்கனியில் எடுத்த காட்சிகளைச் சொல்லலாம். அப்படி வந்திருக்கு. இந்தியாவில் டார்ஜிலிங், சிம்லா போன்ற மலைப் பகுதிக்கு இணையாக குரங்கனி மலைப் பகுதியைச் சொல்லலாம். இந்தியாவில் இருக்கிறவர்கள் பார்க்கணும் என்பதைவிட தமிழ்நாட்டில் இருக்கிறவர்கள் பார்க்க வேண்டிய டூரிஸ்ட் ஸ்பாட் அது. இந்தப் படத்தைப் பார்க்கும்போது செலவு இல்லாமல் குரங்கனிக்கு ட்ரிப் அடித்த ஃபீல் கொடுக்கும். படத்தில் ஐந்து பாடல்கள். அனைத்துப் பாடல்களும் சிறப்பாக வந்திருக்கு. ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ பாடலை ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறோம். இந்த சினிமாவில் சின்ன வேலை என்றாலும் எவ்வளவு சம்பளம் என்று கேட்கும் மக்கள் மத்தியில் பாப் ஷாலினி சம்பளம் பேசாமலேயே பாடிக் கொடுத்தார். சினிமா உலகில் அவர் போன்ற குணமுள்ளவர்களைப் பார்ப்பது அபூர்வம்.

அதேபோல் ‘காதலி இல்லாமல் உலகம் சுற்றாது’ என்ற பாடலை உன்னிமேனன் பாடியுள்ளார். பாடல் அவருக்குப் பிடித்திருந்ததால் ரசித்து ரசித்துப் பாடினார். பாடி முடித்த உற்சாகத்தில் என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தினார். என்னைப் பற்றிச் சொல்வதாக இருந்தால், எனக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் ஓடைப்பட்டி. கல்லூரி டைமில் சினிமா மீது ஈர்ப்பு வந்தது. டிகிரி முடித்ததும் சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்தேன். டைரக்‌ஷன், எடிட்டிங் என்று பல துறைகளில் வேலை செய்துள்ளேன். நடுவுல கல்யாணம், குடும்பம் என்ற கமிட்மென்ட் இருந்ததால் குடும்பத்தைக் காப்பாற்ற சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் நடத்தினேன். ஃபேமிலி லைஃப்ல பிரச்சினை இல்லை என்றாலும் சினிமா மீது இருந்த மோகத்தை என்னால் விடமுடியவில்லை. ஒரு கட்டத்தில் என்னுடைய சினிமா லட்சியத்தை நிறைவேற்ற மனைவி முன்வந்தார்.

என் மனைவிக்கு சினிமா பிடிக்காது. ஆனால் என்னுடைய ஆசைக்காக அண்டா குண்டா அடகு வெச்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இது குடும்பமாக அனைவரும் பார்க்கும் படம். ஆபாசக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. ஆனால் சென்சாரில் காரணமே இல்லாமல் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தார்கள். ஃபேமிலி ஆடியன்ஸ் படம் பார்க்க வரணும் என்பதற்காக ‘யு’ கேட்டு வாங்கினேன். ஆர்ட்டிஸ்ட் சப்போர்ட் இருந்தளவுக்கு டெக்னிக்கல் சைட்ல சப்போர்ட் குறைவாக இருந்தது. போராடித்தான் படத்தை முடித்தேன். யூத் ஆடியன்ஸ் இந்தப் படத்தை என்ஜாய் பண்ணுவார்கள். லவ் சப்ஜெக்ட்ல வித்தியாசமான திரைக்கதை அமைத்திருக்கிறேன். வெற்றி அடையும் என்று நம்புகிறேன். அடுத்து ‘அப்படிப்போடு’ என்ற படத்தை இயக்கவுள்ளேன். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்படும் அந்தப் படம் சினிமாவில் எனக்கு திருப்புமுனையாக அமையும்” என்றார்.

Related posts