உயிரின் மதிப்பு சாதியை விட குறைவானதா?

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி கிருஷ்ணகிரியில் கொலை. ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை இது மீண்டும் வலியுறுத்துகிறதா? என்று பிபிசியின் தமிழின் ‘வாதம் விவாதம்’ பகுதியில் நேற்று கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பிபிசி தமிழின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்த கருத்துகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

“சாதி ஓட்டை நம்பி இருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் சாதி ஒழிப்பு என்பது முடியாத ஒன்று.. இங்கே சாமியை ஒழிக்க நினைக்கும் திராவிடம் கூட சாதியை ஒழிக்க பாடுப்பட்டது மிகவும் குறைவே… அவர்களும் அதை நம்பித்தான் பிழைப்பு நடத்துகின்றனர்.. நாமே திருந்தினால்தான் இச்சாதி எனும் தீயை கட்டுக்குள் கொண்டுவர இயலும்” என்று பிரபு என்ற நேயர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“சாதி மறுப்பு திருமணம்,சாதித் திருமணம் என்று பார்க்க கூடாது.திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான சுய நிர்ணயத்தால் மட்டுமே நிகழ வேண்டும்.ஆணவப் படுகொலைக்கு கடும் சட்டம் முன்னரே கொண்டுவந்திருக்க வேண்டும்” என்று திருமூர்த்தி என்பவர் ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“உயிரே போனாலும் சாதிய விடமாட்டேன் என்று கூறுபவர்களுக்கு கடுமையான தண்டனை தீர்வாகாதே?அடுத்த தலைமுறையில் இருந்து இந்த எண்ணம் மேலோங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கல்விமுறையில் மாற்றம் வேண்டும். தண்டனையால் முழு தீர்வு கிடைக்காது” என்று சாந்த குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“சாதிவெறிக்கு இறையாகிக் கொண்டிருக்கும் மக்களின் வலியைப் புரிந்துகொண்டு அரசு நிச்சயமாக ஆணவப் படுகொலைக்கு எதிரான கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்.மக்களும் சாதி-ஆணவப்படுகொலை குறித்த விவாதத்தை உருவாக்கி சாதிவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்று அஜித் என்ற நேயர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது போல, அவரவர் உணர்ந்து திருந்தாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. இல்லையென்றால், ஜாதி பார்பவர்களை அனைவரும் புறம் தள்ள வேண்டும்” என்று ட்விட்டரில் பிரபு என்பவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Related posts