மனித உரிமைகள் கவுண்சிலில் டென்மார்க்கும் இடம் பிடித்தது

ஐ.நா சபையின் மனித உரிமைகள் கவுண்சிலான யூ.என்.எச்.ஆர்.சி யில் டென்மார்க்கும் நியமனம் பெற்றுள்ளது.

எதிர்வரும் 2019ம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதியில் இருந்து டென்மார்க் பிரதிநிதியும் சர்வதேச மனித உரிமைகள் கவுண்சிலில் இடம் பெறுகிறார்.

இந்த அமைப்பில் இதற்கு முன்னர் டென்மார்க் இடம் பெற்றது கிடையாது இதுவே முதற்தடவையாகும்.

2006ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் கவுண்சில் சுவிற்சலாந்தில் வருடாவருடம் நடைபெறும் மாநாட்டில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்தி வருகிறது.

நல்லூர் திருவிழா போல வருடா வருடம் இந்தத் திருவிழா நடப்பதும் பல வித்துவான்கள் வந்து தவில் வாசித்து தமிழர்களை குஷிப்படுத்தி அடுத்த ஆண்டு வர அச்சாரம் வேண்டி செல்வதும் இப்போது நடைமுறையாகியிருக்கிறது.

இதுவரை இவர்கள் வெளிப்படையாக எதையும் செய்ததாக தெரியவில்லை என்ற விமர்சனங்கள் நாடற்ற மக்களிடையே இருக்கிறது.

இருந்தாலும் இப்படியொரு தாபனம் இருப்பதனால் கொலையில் முடிய வேண்டிய சம்பவங்கள் அடி காயங்களுடன் முடிவடைவதைக் காண முடிவதை நாம் சாதாரணமாக காண முடிகிறது. ஆவா குழுவை அடக்கவே அரசாங்கம் பயப்படுகிறதென்றால் அது மனித உரிமைகள் கழகத்தின் வெற்றியே என்பாரும் உண்டு.

போர்க்குற்ற விளிம்பில் நிற்கும் நாடுகள் ஆபத்தில் மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் அமைதி காத்தும் வருகின்றன. இதனால் சாதாரண திருடர்களை கூட தண்டிக்காமல் பயத்திலும் கிடக்கின்றன.

போர்க்குற்றம், இனவாதம், மதவாதம் போன்றன வேறு தனிப்பட்ட குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகள் வேறு என்பது கூட தெரியாமல் இதுவோ இல்லை அதுவோ என்று பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாமல் மயங்கி முயங்கும் பாமர நாடுகளும் உண்டு.

எப்படியோ டென்மார்க் அங்கத்தவராக வருவதால் டென்மார்க்கில் உள்ள தமிழர்கள் சற்று வீறாப்பாக செயற்பட ஒரு வழி பிறந்துள்ளது.

மனித உரிமை என்பது சர்வதேச வர்த்தகத்தை பாதிக்காத அளவுவரைக்குமே வீரியம் பெற்றுள்ளது. அது உண்மையான மனித உரிமைகளுக்காக போராட வெகு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது.

இருப்பினும் ஆலையில்லாத ஊருக்கு ஏதோ இந்த இருப்பைப்பூவாவது சர்க்கரையாக இனிப்பது பாராட்டப்பட வேண்டியதே.

அலைகள் 14.10.2018 ஞாயிறு

Related posts