சஜித், அநுரவுடன் தமிழ்த் தரப்பு பேச வேண்டும் – தயான்

உள்நாட்டில் நீண்டகாலமாக அரசியலில் புரையோடிப்போயிருக்கின்ற சிங்கள, பௌத்த தேசிய இனவாதத்தினை களைவதற்கு பொருத்தமான தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் தரப்புக்கள் பிரதான போட்டியாளர்களான சஜித், அநுரவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழர்களின் அரசியல் போக்கு அவரோணகத்தில் சென்றுகொண்டிருக்கையில், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துகின்ற முயற்சியானது பொருத்தமான வியூகமாக அமையப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு,கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முஸ்தீபுகளை எடுத்துள்ள நிலையில் அதுதொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு உபாயங்களை முன்னெடுத்துள்ளனர். இருப்பினும் அந்த உபாயங்களால் தமிழ் மக்களுக்கு போதுமான அளவில் பிரதிபலங்கள் கிடைத்திருக்கவில்லை.

அவ்வாறான பின்னணியில் தற்போது தமிழ் அரசியல் தரப்புக்கள் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் ஒருமித்து நின்று செயற்பட்டுவதற்கு முன்வருகின்ற பட்சத்தில் சாத்தியமானதொரு வியூகமாகும்.

ஆனால் கள யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வியடத்தில் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இடையில் ஏகமனதான நிலைமைகள் வரப்போவதில்லை.

இதன்காரணமாக, தமிழ் கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற உறவுகள் தற்போதைய நிலைமையை விடவும் மோசமானதாகவே அடையப்போகின்றது.

அவ்விதமான நிலைமையில், நிறுத்தப்படும் தமிழ் வேட்பாளரால் அதியுச்ச கோரிக்கையான சுயாட்சி உள்ளிட்டவற்றை முன்வைப்பது மிகக் கடினமானதாகவே அமையும்.

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 1977இல் தேர்தலுக்கு முகங்கொடுத்த நிலைமைகள் தற்போது இல்லை. தமிழர்களின் அரசியல் போக்கு அவரோகணத்திலேயே உள்ளது. அவ்விதமானதொரு சூழலில் பொதுவேட்பாளர் முடிவானது பொருத்தமான நகர்வாக அமையாது.

மேலும் தென்னிலங்கையில் அடுத்த ஜனாதிபதி தோதலில் பிரதான வேட்பாளராக இருக்கப்போகின்றவர்கள் சஜித் பிரேமதாசவும், அநுரகுமார திஸாநாயக்கவுமே.

இவர்கள் இனவாதத்துக்கு எதிராக ஒன்றுதிரண்ட ‘அரகல’வின் சக்தியை அறிந்தவர்கள். ஆகவே அவர்கள் மீண்டும் சிங்கள, பௌத்த இனவாத விடயங்களை மையப்படுத்தி அரசியல் செய்வதற்கு விளைய மாட்டார்கள்.

அவ்விதமான சூழலில் நாட்டில் தற்போது, சிங்கள, பௌத்த இனவாதத்தினை அரசியலில் இருந்து துடைத்தெறிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை தமிழ்த் தரப்பினர் சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஆகவே,அவர் சஜித், அநுர ஆகியோருடன் நீண்டகாலமாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகள் சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுத்து தீர்வினை எட்ட வேண்டும்.

அதேநேரம், ஸ்பெயினின் கட்டலோனியாவில் நடைபெற்ற விடயத்தினையும், குர்திஸ்லாந்தில் ஏற்பட்ட நிலைமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி, பிரித்தானிய பிரமர் தட்சருக்கு எதிராக போராடிய சின்பிங் அமைப்பின் வியூகத்தினையும் முன்னுதாரணமாகக் கொண்டு தீர்மானங்களை எடுக்கவும் முடியும்.

அதனடிப்படையில் தமிழ்த் தரப்பு பொருத்தமான தருணத்தினை பயன்படுத்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதே பொருத்தமானது என்றார்.

Related posts