மோடி தலைமையிலான ஆட்சி மாற வேண்டும்

நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மாற வேண்டும் என நாடு விரும்புகிறது என டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசினார்..

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தேர்தல் அறிக்கைக் குழு தலைவர் ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய சிங், அஜய் மாக்கன், குமாரி செல்ஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என நாடு தீவிரமாக கோருகிறது. 2004-ல் வாஜ்பாய் முன்வைத்த ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷத்துக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அதே கதி தற்போதைய ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படும் ‘மோடியின் உத்தரவாதங்கள்’ முழக்கத்துக்கும் ஏற்படும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயங்களை கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைத்து வீடுகளுக்கும் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் அறிக்கைக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். நாம் நமது தேர்தல் அறிக்கையில் வழங்கி உள்ள உறுதிமொழிகளை நாடு முழுவதற்கும் கொண்டு செல்ல வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அவை அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு உறுதிமொழியும் மிக நீண்ட ஆய்வுக்குப் பிறகே அறிவிக்கப்பட்டுள்ளன. 1926ல் இருந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் நம்பிக்கை மற்றும் உறுதிக்கான ஆவணங்களாக இருந்திருக்கின்றன.

ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நாடு தழுவிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறது. இது வெறும் அரசியல் யாத்திரை அல்ல. மிகப் பெரிய மக்கள் இயக்கமாக நமது அரசியல் வரலாற்றில் இது பொறிக்கப்படும். இதுபோன்ற மிகப் பெரிய மக்கள் இயக்கத்தை நமது காலத்தில் வேறு யாரும் மேற்கொண்டதில்லை. இதனை யாராலும் மறுக்க முடியாது. ராகுல் காந்தி மேற்கொண்ட இந்த இரண்டு யாத்திரைகளிலும் மக்களின் பிரச்சினைகள் தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளன” என தெரிவித்தார்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால், ஜெயராம் ரமேஷ் ஆகியோர், “மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு வழங்கப்பட்டது. மேலும், தேர்தல் அறிக்கையை வெளியிடும் தேதியை அவர் முடிவு செய்வார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெறும் தேர்தல் அறிக்கையாக இல்லாமல், நியாய பத்திரங்களாக இருக்கும்” என குறிப்பிட்டனர்.

Related posts