இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களின் 2 விசைப் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 23 மீனவர்களை கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 492 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். ஜேம்ஸ், சகாயராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 2விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இரு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து, அதிலிருந்த 23 மீனவர்களைக் கைது செய்தனர்.அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இன்று வேலைநிறுத்தம்: இதுகுறித்து தகவலறிந்த ராமேசுவரம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், மீன்பிடி இறங்குதளத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் இன்று (பிப். 5) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 150-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத் தரவேண்டும். இல்லையேல், வரும் மக்களவைத் தேர்தலை மீனவர்கள் புறக்கணித்து, தங்களது வாக்காளர் அடையாள அட்டையைமாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

தலைவர்கள் கண்டனம்: தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ்: இலங்கை கடற்படையினரால் கடந்த மாதத்தில் மட்டும் 40-க்கும்மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக மீனவர்கள்இலங்கை கடல் கொளையர்களாலும், இலங்கை கடற்படையினராலும் பாதிக்கப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்களின் இழப்புக்கு நிவாரணம் பெற்றுத்தரவும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: இலங்கை கடல்கொள்ளையர்களாலும், கடற்படையினராலும் தமிழக மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய அரசு, வேடிக்கைப் பார்த்து வருகிறது. இனியாவது தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts