எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நாட்டின் மிகப்பெரிய இந்த கவுரவம் குறித்து அத்வானியிடம் பேசி எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

நம் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராக, அத்வானி ஜி இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்ட தொண்டனில் தொடங்கி நமது நாட்டின் துணை பிரதமராக உயர்ந்தவர். உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். அவரது நாடாளுமன்ற விவாதங்கள் முன்னுதாரணமாக இருந்துள்ளன.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை மேம்படுத்துவதற்கு இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டவர் அத்வானி. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட இந்த தருணம் எனக்கு மிகவும் உணர்ச்சி மிகுந்தது. அவருடன் பழகுவதற்கும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்ததை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியில் நீண்ட கால தலைவராக இருந்தவருமான லால் கிருஷ்ண அத்வானி. கடந்த 1927 ஆம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின், தற்போது பாகிஸ்தானின் பகுதியாக இருக்கும் கராச்சியில் பிறந்தார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவுக்கு வந்தது.

இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், பின்னர் ஜன சங்கத்திற்காக வேலை செய்தார். கடந்த 1980 ஆம் ஆண்டு பாஜகவை உருவக்கிய தலைவர்களில் அத்வானியும் ஒருவர். அதனைத் தொடர்ந்து வாஜ்பாயுடன் இணைந்து பாஜகவின் முகமாக நீண்டகாலம் அறியப்பட்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 1990ல் அத்வானி நடத்திய “ரத யாத்திரை” தேசிய அரசியலில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.

Related posts