அதானியைத் தவிர அனைவருக்கும் அநீதி

அதானியைத் தவிர நாட்டில் உள்ள அனைவருக்கும் அநீதி இழைக்கப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “பாஜக வெறுப்பை பரப்பி வருகிறது. இந்த வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நாங்கள் தொடங்கிய இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து வந்துள்ளது. வெறுப்புக்கு எதிராக அன்பின் கடைகளைத் திறப்போம் என்ற முழக்கத்தையே நாங்கள் கொடுத்து வருகிறோம்.

அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வெறுப்பை, வன்முறையைப் பரப்பட்டும். நாங்கள் கவலைப்பட போவதில்லை. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடு முழுவதும் அன்பின் கடைகளைத் திறப்போம். ஏனெனில், பாஜகவினரின் இதயத்தில் இருக்கும் வெறுப்புக்கும் அச்சத்துக்கும் எதிராகவே போராடுவதே எங்கள் பணி.

நீதிக்காக குரல் கொடுப்பதும் இந்த யாத்திரையின் முக்கிய நோக்கம். ஒவ்வொருவரையும் ஒருங்கிணைக்க, ஜார்க்கண்ட்டில் அன்பின் கடைகளைத் திறக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாடு முழுவதும் உள்ள ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு எதிராக மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது.

இந்தியாவில் அதானி என்று சொன்னாலே போதும், அடுத்த நொடியே மக்கள் புரிந்து கொள்வார்கள். அதானியின் முதலீடே நரேந்திர மோடிதான். நில தீர்ப்பாய மசோதாவை நாங்கள் கொண்டு வந்தோம். பிரதமர் நரேந்திர மோடி அதனை ரத்து செய்துவிட்டார். ஒவ்வொருவருக்கு எதிராகவும் அநீதி இழைக்கப்படுகிறது. அதானியைத் தவிர மற்ற இந்தியர்கள் அனைவரும் அநீதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீரின் ஸ்ரீநகர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த 2022-23-ல் மேற்கொண்ட ராகுல் காந்தி, அதன் இரண்டாம் கட்ட யாத்திரையான இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மணிப்பூரில் கடந்த ஜனவரி 14-ம் தேதி தொடங்கினார். இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிய இந்த பயணம், 66 நாட்களில் 6.200 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து மும்பையில் முடிவடைய இருக்கிறது. இந்த யாத்திரை, மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்கள் வழியாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts