பெண் எழுத்தாளரை விமர்சித்த டிரம்ப்க்கு நேர்ந்த கதி

பெண் எழுத்தாளர் ஒருவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜீன் கரோல் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த டிரம்ப், தனது சமூக வலைதளத்தில் ஜீன் கரோலை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.

இந்நிலையில் டிரம்புக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த ஜீன் கரோல், தனக்கு 10 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிரம்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.

இதன்படி, எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக டொனால்டு டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எழுத்தாளர் ஜீன் கரோல் கேட்டதை விட சுமார் 10 மடங்கு அதிக தொகையை இழப்பீடாக வழங்க டிரம்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னதாகவே நீதிமன்றில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “இது அமெரிக்கா இல்லை” என்று கூறிவிட்டுச் சென்றார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related posts