இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டது!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணியின் திடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சி கலந்த சோத்தை ஏற்படுத்தியுள்ளது.

துரதிர்ஷ்டவசமான இந்த இழப்பின் காரணமாக ஜனவரி 27ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவிருந்த இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான்” இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிகழ்ச்சிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த இளையராஜா உட்பட பாடகர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டில் இருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், அதே நிகழ்வுக்கான புதிய திகதிகள் மிக விரைவில் அறியத்தரப்படும். ‍

ஏற்கெனவே ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வுக்கான டிக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டவர்கள், அதே டிக்கெட்டுக்களை புதிய திகதிகளிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மனம் வருந்துகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மறைந்த பின்னணி பாடகியான பவதாரணியின் பூதவுடல் இன்று (26) பிற்பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தினூடாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இசைஞானி இளையராஜாவின் மகளும், மறைந்த பின்னணி பாடகியுமான பவதாரணியின் பூதவுடலை பார்ப்பதற்காக அவரின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தமிழ் திரைப் பிரபலங்கள் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.

Related posts