தமிழக அரசின் இந்து விரோத செயல்

தமிழகத்தில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை.

தனியாருக்கு சொந்தமான கோயில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கோயிலின் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகம், விளையாட்டு துறை பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் என 11,000 விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி மட்டுமன்றி உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக உத்தர பிரதேசத்தை ஒட்டியுள்ள நேபாளத்தின் 570 கி.மீ. தொலைவு எல்லைப் பகுதியில் தீவிர ரோந்து பணி நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், “அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு மிரட்டி வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகத்தின் பல பகுதிகளில் ராமர் கோயில் நிகழ்ச்சிகளை ஒட்டி பஜனைகளுக்கு ஏற்பாடு செய்தல், ஏழை எளியோருக்கு உணவு வழங்குதல், இனிப்புகள் வழங்கி கொண்டாடவும், அயோத்தியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை காண விரும்பும் மக்களும் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இந்நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பின்போது மின்தடை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறியுள்ளனர்.

இவை அனைத்தும் இண்டியா கூட்டணிக் கட்சியான திமுகவின் இந்து விரோத முயற்சி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related posts