மஹிந்த உள்ளிட்ட சிலர் நடுக்கடலில் விருந்துபசாரம்

நாடு வங்குராேத்து அடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு நடுக்கடலில் விருந்துபசாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச தரப்பு உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட குழுவினர் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்ஸகாவா மற்றும் தியகூலா ஆகிய 02 கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடல் நடுவில் விருந்துபசார கொண்டாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதற்கு துறைமுக இராஜாங்க அமைச்சர் எழுத்து மூல அனுமதியும் வழங்கியுள்ளார்.

நாடு வங்குரோத்தாகி உள்ள இவ்வேளையில், அரச நிதியை பயன்படுத்திக்கொண்டு, அரசுக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு அதற்கு தேவையான எரிபொருள் செலவிட்டு எவ்வாறு கடல் நடுவில் விருந்துபசாரம் மேற்கொள்ள முடியும். துறைமுகத்தில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு, குடிபான வகைகளை கூட பெற்றுக் கொண்டு, இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

நான் தெரிவிக்கும் இந்த விடயம் உண்மை. அரசாங்கம் சவால் விடுவதாக இருந்தால், இதுதொடர்பான புகைப்படங்களை சபைக்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன். வங்குராேத்து அடைந்துள்ள நாட்டில் இவ்வாறு செயற்பட முடியுமா?

அமைச்சர்களின் தனிப்பட்ட செலவில் இந்த விருந்துபசாரங்களை நடத்துவது பிரச்சினையல்ல. என்றாலும்,அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் இந்த 2 கப்பல்களுக்கும் ஏறுவதற்காக சிவப்பு கம்பளம் கூட விரிக்கப்பட்டது.

இவ்வாறு மக்கள் பணத்தை செலவு செய்து விருந்து வைப்பது தொடர்பில் தான் எமக்கு ஆட்சேபனை இருக்கிறது.

நாட்டு மக்கள் இதனை தெரிந்துகொள்ள வேண்டும். இது பாரிய குற்றச்செயலாகும். இது தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.

Related posts