முத்து vs ஆளவந்தான் – ரீரிலீஸ் வசூலில் முந்துவது எது?

ரஜினியின் ‘முத்து’ மற்றும் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ படங்கள் திரையரங்குகளில் ஒரே நாளில் மறு வெளியீடு செய்யப்பட்ட நிலையில், இதன் வசூல் நிலவரங்கள் குறித்து பார்ப்போம்.

கடந்த 1995-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘முத்து’.

கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் கடந்த 8-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த மறுவெளியீட்டை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார்.

பின்னர் பேசிய அவர் விரைவில், ‘படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

அதேபோல கமல்ஹாசன் நடிப்பில் தாணு தயாரிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘ஆளவந்தான்’ படமும் 8-ம் தேதி ரீ – ரிலீஸ் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படத்தின் 50 நிமிடங்கள் எடிட் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில், தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் வரவேற்பு இருந்த போதிலும், ‘ஆளவந்தான்’ படத்துக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதன் எதிரொலியாக முதல் மூன்று நாள் வசூலில் கமலின் ‘ஆளவந்தான்’ தமிழகத்தில் ரூ.15 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் ‘முத்து’ திரைப்படம் அதில் பாதி, அதாவது ரூ.7 லட்சம் அளவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘ஆளவந்தான்’ உலக அளவில் இன்னும் கூடுதலாக வசூலை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts