சுயநிர்ணய உரிமைக்கான உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்துகிறார்கள்

மாவீரர் நாள் மரணமான உறவினர்களைத் தமிழர்கள் நினைவுகூரும் நாள் மட்டுமன்றி தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானித்து அரசின் அடக்குமுறை இன்றி வாழும் அரசியல் சட்டகத்தைப் புரிந்துஇ தமிழ்த் தேசத்தைப் பலப்படுத்துவதற்கான நாளாகவும் அமைகிறது.என இலங்கையில் சமத்துவம் மற்றும்நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று மாவீரர் நாளில், இலங்கையின் வடக்குக் கிழக்கிலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து, சிங்கள பௌத்த தேசியவாத அரச அடக்குமுறையில் இருந்து தமிழர்களை விடுவிக்கப் போராடியவர்களை நினைவுகூருகிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மரணமான முதல் போராளியான லெப். சங்கரின் நினைவு நாளான இந்நாள், இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் மரணமான அனைவரையும் நினைவுகூரும் நாளாகவும் விளங்குகிறது.

நினைவேந்தல்களைச் சட்டப்படி தடை செய்வதற்கு முயற்சிகள் தொடரும் நிலையிலும், தற்காலிக நினைவுவிடங்கள் பாதுகாப்புப் படையினரால் வன்முறையான வழியில் அழிக்கப்படும் சூழலிலும், அரசின் தலைமையில் இடம்பெறும் அச்சுறுத்தல், கண்காணிப்பு, துன்புறுத்தல் என்பவற்றை மேலும் ஒரு வருடகாலம் எதிர்த்து, நினைவேந்தலுக்கான தமது உரிமைக்காகத் தமிழர்கள் எப்போதும்போல் துணிவுடன் இருக்கிறார்கள்.

ஆயுதப் போர் முடிவடைந்து ஏறத்தாழ 15 வருடங்களாகும் நிலையில், சிங்கள பௌத்த தேசியவாத நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்திட்டம் முழுவீச்சில் தொடர்கிறது. தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் பெருமளவான சிங்களமயமாக்க முயற்சிகள் இடம்பெற்று, காணி அபகரிப்பு, தமிழர் வழிபாட்டு இடங்கள் அழிக்கப்படுதல், சட்டவிரோதமாக பௌத்த விகாரைகள் கட்டப்படுதல் என்பன அதிகரிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கள கொள்கை வகுப்பாளர்களும், பௌத்த பிக்குகளும் வன்முறைத்தன்மை அதிகரிக்கும் சிங்கள பௌத்த தேசியவாத கருத்துகளைப் பிரபல்யப்படுத்துகிறார்கள். மீளிணக்கம், தமிழர் விடயங்களில் முன்னேற்றம் என்பன குறித்த உறுதிமொழிகளைச் சர்வதேச சமூகத்திற்கு வழங்கும் இலங்கை அரசு, மறுபுறம் நம்பகத்தன்மையுள்ள வகையில் குற்றம் சுமத்தப்பட்ட போர்க் குற்றவாளிகளை அதிகாரமுள்ள அரச உயர் பதவிகளுக்கு வெளிப்படையாக நியமிக்கிறது. பாதுகாப்புக்கான வீங்கிய நிதி ஒதுக்கீடும், தமிழர் வாழும் வடக்குக் கிழக்கில் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது விகிதாசாரத்திற்கு அதிகமான இராணுவ மயமாக்கலுமாக முன்னைய அரசுகளினதும், தற்போதைய அரசினதும் சிங்கள பௌத்த தேசியவாத கொள்கைகள் நாட்டில் தொடர்ந்தும் அழிவை ஏற்படுத்துகின்றன. இலங்கை முழுவதையும் பாதிக்கும் சிங்கள பௌத்த பெரும்பான்மைவாத கட்டமைப்புக்குத் தமிழர்களின் எதிர்ப்புப் பலமானதாகவும், வளங்குன்றாததாகவும் விளங்கிறது.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் தமிழ் இளையோர் ஆயுதம் ஏந்துவதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பே ஆரம்பமாகியது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு நடைமுறையில் இருந்த தமிழர்களின் அரசு, பன்முகத்தன்மை கொண்டிருந்து, சில வருடங்கள் மட்டும் நீடித்தாலும், தமிழர்கள் சுதந்திரத்தை அனுபவித்ததுடன், அடிமட்ட ஆதரவுடன் அது கட்டியெழுப்பப்பட்டது. இந்தக் கட்டமைப்புகள் அழிவடைந்துவிட்டாலும், தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தயக்கமின்றித் தொடர்வதுடன், தமிழர்களின் தேசிய நாட்காட்டியில் மிக முக்கியமான நினைவேந்தலாக மாவீரர் நாள் விளங்குகிறது. மாவீரர் நாள் மரணமான உறவினர்களைத் தமிழர்கள் நினைவுகூரும் நாள் மட்டுமன்றி, தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானித்து, அரசின் அடக்குமுறை இன்றி வாழும் அரசியல் சட்டகத்தைப் புரிந்து, தமிழ்த் தேசத்தைப் பலப்படுத்துவதற்கான நாளாகவும் அமைகிறது.

இலங்கை அரசுக்குப் பொறுப்புள்ள போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றுக்கு இலங்கை அரசிடம் இருந்து தமிழர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. இலங்கையின் ஒற்றையாட்சி முறையில் நிலவும் – இனவாதமும், பகுத்தறிவற்றதும், உறுதித்தன்மையைச் சீர்குலைப்பதுமான – ஆட்சி, கடுமையாக இராணுவ மயமாக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் தமிழர்களையே மிக அதிகமாகப் பாதிக்கிறது. இலங்கைத் தீவின் பொருளாதார, அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, பன்முகத்தன்மை கொண்டதும், இராணுவ நீக்கம் செய்யப்பட்டதும், அதிகாரங்கள் பகிரப்பட்டதுமான எதிர்காலம் குறித்த தொலைநோக்குத் தேவைப்படுகிறது. தமிழ்த் தேசம், கொழும்பு அரசின் தோல்வியடைந்த கொள்கைகளில் இருந்து தப்பி, உலகுடன் அரசியல் பொருளாதார தொடர்புகளைக் கொண்டிருப்பதை உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வும் அர்த்தமுள்ள சுயநிர்ணய உரிமையுமே தமிழர்களுக்கான நிலையான அரசியல் தீர்வுக்கான ஒரே வழியென்பது தெளிவாகிறது. சுதந்திரத்திற்கான போராட்டம் தொடரும் நிலையில்கய, உலகெங்கும் உள்ள தமிழர்கள் நினைவேந்தலுக்கென ஒன்றுதிரள்கிறார்கள்.

நன்றி : வீரகேசரி

Related posts