9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

உயிர்த்த ஞாயிறன்று (21) நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பில் 60 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

9 தற்கொலைதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

—————-

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இன்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது,

புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை வைத்து யாரும் அரசியல் செய்வார்களாயின் அதை விட கேவலமான ஒன்றாக இருக்க முடியாது.

புலிகள் இயக்கத்தில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய கரும்புலிகளுக்கு இதனை செயற்படுத்த சுமார் 20 வருடங்கள் எடுத்தது. ஆனால் இந்த மோசமான கயவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வாறான ஒரு ஈனச்செயலை மேற்கொண்டு ஒரே நாளில் இத்தனை அழிவுகளை உண்டு பண்ணியிருக்கின்றன. இதன் மூலம் உயிர்களைப் பலி கொண்டது மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழித்துள்ளனர்.

இவ்வாறான செயலை நினைத்து நினைத்து சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் அவர்களின் வழிகாட்டல் இயக்கமான ஜம்இய்யதுல் உலமாவும் பெரும் கவலை கொண்டிருப்பதுடன் தினமும் வேதனையால் வாடிக்கொண்டிருக்கின்றன.

அது மாத்திரமன்றி இந்த சமூகம் பகிரங்கமாக இந்த செயலை கண்டித்திருக்கின்றது. அது மாத்திரமன்றி இந்த சம்பவத்தின் சூத்திரதாரியான ஸஹ்ரான் என்பவரினதும் புகைப்படத்தையும் ஆவணங்களையும் பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பித்தும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது குறித்து இன்றும் ஜம்இய்யதுல் உலமாவும், முஸ்லிம் சமூகமும் வேதனையுடன் இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து எங்களிடமும் கேள்வி கேட்கின்றனர்.

இந்த நாட்டிலே மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அது மாத்திரமின்றி இந்த பயங்கரவாதத்தை துடைத்தெறிய முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

————–

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு நாளை (25) சர்வ கட்சி மற்றும் சர்வ மத மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை மு.ப.10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வ கட்சி மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை பி.ப 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வ மத மாநாடு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

—————

புறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, குண்டு செயலிழக்கும் பிரிவினரால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தொடர்பாக அடையாளம் காணும் நோக்கில் அவரது விபரங்களை போக்குவரத்துத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயினும் குறித்த மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

————

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் துக்கத்தினத்தை அனுஷ்டிக்குமாறே நான் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கூறினேன், அவர் அதனை திரிபுப்படுத்தி, கடைகளை மூடி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கும் இடையிலான தொடர்புகள் சம்பந்தமாக முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளது.

ஆகவே இந்த அமைப்புக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை, ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயற்பாடு எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

————-

வன்முறையானது எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம் பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மீண்டும் பிரகடணப்படுத்தப்படும் அவசரகால சட்டமானது வன்முறையில் ஈடுபடுகின்றவர்களையும், வன்முறையாளர்களை நியாயப்படுத்துகின்றவர்களையும், அதைத் தூண்டிவிடுகின்றவர்களையும், அதற்குத் துணைபோகின்றவர்களையும், துணைபோகின்றவர்களில் சுயலாப அரசியல்வாதிகள் இருந்தால் அத்தகையவர்களையும் ஒடுக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts