‘ஓப்பன்ஹைமர்’ – விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓப்பன்ஹைமர்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் ரூ.2450-க்கு விற்பனையாகும் ஐமேக்ஸ் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் ஹவுஸ்ஃபுல்லாகியுள்ளது.
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய ‘மெமன்டோ’, ‘ தி ப்ரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றவை. திரைக்கதை அமைப்பில் தனக்கென்று ஒரு தனி முத்திரைப் பதித்தவர் நோலன். கடைசியாக, கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனெட்’ திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது நோலன் இயக்கியுள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ (‘Oppenheimer’) படம், இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரைப் பற்றி பேசுகிறது. | வாசிக்க > கவிதை எழுதிய சிறுவன் ‘அணுகுண்டு’ உருவாக்கிய கதை… – யார் இந்த ஓப்பன்ஹைமர்?
இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடிக்கிறார். ‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. இப்படம் வரும் ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டிக்கெட்டுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கான ஐமேக்ஸ் திரையரங்கு டிக்கெட்டுகள் டெல்லி, மும்பை, சென்னையில் விற்று தீர்ந்துவிட்டன.
டெல்லியில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் ஒரு டிக்கெட் 1160 ரூபாயிலிருந்து 2450 ரூபாய் வரை விற்பனையாகிறது. மும்பையிலும் இதை விலை என்ற போதும் அங்கேயும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. சென்னையை பொறுத்தவரை ஐமேக்ஸ் டிக்கெட்டுகளை அடுத்த 3 நாட்களுக்கு எதிர்பார்க்க முடியாத நிலையில் ஹவுஸ்புல்லாக உள்ளது. மற்ற திரையரங்கு டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.

Related posts