வடக்கில் அநாகரீகமான உடையில் அலையும் பொலிஸார்?

முறிகண்டி பொலிஸ் காவலரண் பொதுமக்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதில்லை என பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் மக்களின் பாதுகாப்பு சேவையை உறுதி செய்வதற்காகவும், இலகு படுத்தலிற்காகவும் முறிகண்டியில் பொலிஸ் காவலரண் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த காவலரணில் மக்கள் முறைப்பாடுகள் செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்றைய தினம் (04) பிற்பகல் 2 மணியளவில் ஒருவர் சேவை பெறுவதற்கான சென்ற பொழுது குறித்த காவலரணில் எவரும் இருந்திருக்கவில்லை.

காவல் கடமையில் எவரும் இல்லாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காவலரணில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் முறையற்ற உடையில் சாரத்துடன் இருந்ததுடன், தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் நீராடிவிட்டு மாற்று உடையில் இருந்துள்ளார்.

சேவைக்கு சென்ற நபர் சேவையை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அப்போது அந்த நபர் தமிழ் உத்தியோகத்தரிடம் வினவிய போது, கடமையில் யாரும் இல்லை, தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாடு மாறும் கூறியுள்ளார்.

குறித்த காவலரணுக்கு பொறுப்பான அதிகாரியை சந்திக்க கோரிய போது அவ்வாறு எவரும் இல்லை எனவும், மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயங்களை பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து பிரதி பொலிஸ்மா அதிபர் குறித்த காவலரணுக்க பொறுப்பான அதிகாரியை தொடர்பு கொண்டு விடயங்களை கேட்டறிந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொது மக்களிற்கு சேவை வழங்க முடியாத குறித்த முறிகண்டி காவலரண் தேவையற்ற ஒன்று எனவும், அதனால் பிரதேச மக்களிற்கு எவ்வித பயனும் இல்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் சேவையை பெற்றுக் கொள்ள செல்லும் சந்தர்ப்பங்களில் அநாகரீகமான ஆடைகளுடன் நடமாடும் குறித்த உத்தியோகத்தர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து, பொதுமக்களிற்கு சேவை செய்யக் கூடிய உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

Related posts