பாக்ஸ் ஆபீஸ் : அக்‌ஷய் குமார்

தனது படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தோல்வி குறித்து பேசியுள்ள பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், “ஒருவரை உருவாக்கவும், உடைக்கவும் செய்வது பாக்ஸ் ஆபீஸ் எண்கள்தான்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், “என் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். ஒரு விஷயம் சரியாக நடந்தால் அதை பாராட்டுவதும், அது நினைத்தபடி செல்லவில்லை என்றால் கற்பனை செய்வதை விட மோசமான விமர்சனங்களை எதிர்கொள்வதும் பொதுவான விஷயம்தான்.

நானும் மனிதன் தான். நல்லது நடந்தால் மகிழும் அதேவேளையில் மோசமான விஷயங்களுக்கு வருந்தவும் செய்வேன்.

ஆனால், எது நடந்தாலும் உடனே அதனை கடந்துவிடும் என்னுடைய திறனைக் கண்டு நானே பெருமைப்படுவதும் உண்டு. என்னுடைய வேலைதான் என்னை தொடர்ந்து வழிநடத்துகிறது. அதை யாராலும் என்னிடமிருந்து பறித்துவிட முடியாது.

நீங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. நேர்மையான உழைப்புக்கான பலன் உங்களை வந்து சேரும் என்பதில் மாற்றமில்லை” என்றார்.

மேலும், பாக்ஸ் ஆபீஸில் தனது படங்கள் தோல்வியடைவது குறித்து பேசிய அவர், “ஆம். பாக்ஸ் ஆபீஸ் தோல்வி என்னை பாதிக்கவே செய்கிறது. பாக்ஸ் ஆபீஸ் எண்கள்தான் நம்மை உருவாக்கவும், உடைத்து நொறுக்கவும் செய்கிறது. அதைத்தான் ஹிட், ஃப்ளாப் என்கிறார்கள். நாம் எப்போது சரியாக இருக்கிறோம், எங்கே தவறு செய்கிறோம் என்பதை பார்வையாளர்கள் உணர்த்திவிடுகிறார்கள். அவை எல்லாமே பாக்ஸ் ஆபீஸ் எண்களில் பிரதிபலித்துவிடுகிறது.

ஒரு படம் தோல்வி அடைந்தால், அது பார்வையாளர்களுக்கு கனெக்ட் ஆகவில்லை என்று அர்த்தம். நீங்கள் மாறியாக வேண்டும் என்பதை அவர்கள் சொல்லிவிடுகிறார்கள். அதைத்தான் எங்கள் மொத்த துறையும் செய்துவருகிறது என நினைக்கிறேன்” என்றார்.

அக்‌ஷய் குமார் நடிப்பில் அக்டோபர் 5-ம் தேதி ‘The Great Indian Rescue’ மற்றும் ஆகஸ்ட் மாதம் ‘OMG- Oh My God 2’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts