ஜெயம் ரவியுடன் இணையும் பிரியங்கா மோகன்?

நடிகர் ஜெயம்ரவியின் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அவருடன் பிரியங்கா மோகன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் லக்‌ஷ்மணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான படம் ‘பூமி’. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து, ‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
துறைமுகத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படம் தூத்துக்குடியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவியின் 30-வது படமாக அமைய உள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அடுத்த மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ் ஸ்டைலில் பக்கா கமர்ஷியல் கலந்து காமெடி படமாக இந்தப் படம் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts