புலம்பெயர் தொழிலாளர்களின் வலிமிகு ஆவணம்!

விடிந்த பொழுதொன்றில் விடியாத தன் வாழ்க்கையின் இருளைச் சுமந்தபடி ஜல்லிக்கற்கள் கொட்டிக் கிடக்கும் தண்டவாளங்களின் ஊடே சொந்த ஊர்களுக்கு திரும்புகிறது ஒரு புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம். அந்தக் கூட்டத்திலிருக்கும் சிறுமி ஒருவரின் காலில் குத்தும் முள் குருதியில் நனைய, அதை நீக்கும் தருணத்தில் இளைப்பாறுகிறார்கள். ‘ட்ரெய்ன் வந்துச்சுன்னா என்ன பண்றது?’ என ஒருவர் கேட்க, ‘அதெல்லாம் வராது’ என சொல்லி தண்டவாளத்தில் தலைவைத்து உறங்கிவிடுகிறார்கள். தூரத்திலிருந்து ரயிலின் சத்தம் மரண ஓலமாய் கேட்க காட்சி ‘கட்’ ஆகிறது. இந்த ஒரு காட்சி ‘Bheed’ பேசப்போகும் கன்டென்ட்டுக்கு அத்தாட்சி. பாலிவுட்டை கடந்து பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்ட ‘ஆர்டிக்கள்15’ இயக்குநர் அனுபவ் சின்ஹாவின் படம். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

வாட்ச்மேனாக பணியாற்றும் பல்ராம் திரிவேதி (பங்கஜ் கபூர்) கரோனா முடக்கத்தால் தன் நண்பர்கள் மற்றும் சக புலம்பெயர் தொழிலாளர்களுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கிறார். டெல்லியிலிருந்து 1200 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் தேஜ்புர் (Tejpur) எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகிறார். அவர் மட்டுமல்லாமல் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளனர். சீல் வைக்கப்பட்டுள்ள அந்த எல்லையைத் தாண்டிச் செல்வதற்கான பாஸ் இல்லாததால் அவர்களுக்கான அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் காவல் அதிகாரி சூர்ய குமார் சிங்குக்கும் (ராஜ்குமார் ராவ்) இடையே மோதல் வெடிக்க, இறுதியில் தொழிலாளர்களின் நிலை என்னவானது என்பது தான் படத்தின் மீதிக்கதை.

வலியையும் துயரத்தையும் எந்தவித மிகை சாயமுமின்றி கருப்பு வெள்ளை மூலம் மொத்தப் படமும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ஒருவித நெருக்கத்தை கூட்டுகிறது. கரோனாவின் பெருந்துயரை ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வழியே சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதியிருந்த விதம் அழுத்தம் கூட்டுகிறது. தன் மகளை மீட்டு கொண்டுவரச் செல்லும் தாய், குடிகார தந்தையை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்லும் மகள், வெற்று சாதி பெருமை பேசி உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் வாட்ச்மேன், புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலையை படம்பிடித்துகாட்டும் பத்திரிகையாளர், மக்களுக்கும் அரசுக்கும் இடையே சிக்கிக்கொண்டு முழிக்கும் காவல் அதிகாரி என படம் நெடுங்கிலும் வரும் கதாபாத்திரங்கள் காட்சிப்படுத்தபட்ட விதமும், அவர்களுக்கான சூழலும் பெருந்தோற்று காலத்தை கண்முன்நிறுத்துகிறது.

புலம்பெயர் தொழிலாளர்களை வரிசையாக அமர வைத்து சானிடைசர் அடிப்பது, முஸ்லிம்கள் உணவு கொடுக்கும்போது அதனை மற்றவர்கள் வாங்க மறுத்து, ‘நீங்கள் தான் கரோனாவை பரப்பினீர்கள்’ என பேசும் வசனம், உணவின்றி தவித்த குழந்தைகள் என கரோனா காலக்கட்டத்தின் நிகழ் சாட்சியங்களாக கண்முன் விரிகின்றன. பெண்கள் நாப்கினுக்கு பதிலாக நியூஸ் பேப்பர் பயன்படுத்தியது, புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான காவல் துறையின் அத்துமீறல், அடைக்கப்பட்ட ட்ரக்கில் ஒளிந்துகொண்டு ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்கள் என துயரங்களை ஆவணங்களாக பதிவு செய்கிறது படம்.

இயக்குநர் அனுபவ் சின்ஹா படத்தை வெறும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வலியாக மட்டும் பதிவு செய்யாமல், அதனூடே நிகழ்ந்த சாதிய, வர்க்க, மத பேதங்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். தொழிலாளர்கள் குவிந்திருக்கும் பகுதிக்கு அருகே உள்ள வணிக வளாகம் (shopping mall) ஒன்றில் உணவுகளை எடுக்க அனுமதி மறுக்கும் காவல் துறை, “அந்த வணிக வளாக கட்டிடத்த கட்னதோட அவங்கள வேல முடிஞ்சுடுச்சு. அதுக்கு உள்ள போக அவங்களுக்கு தகுதியில்ல” போன்ற வசனம் கொடூர காலக்கட்டதிலும் அதிகார, வர்க்க பேத சூழலை அப்பட்டமாக காட்சிபடுத்துகிறது படம்.

‘கரோனாவுக்கு கூட மதம் இருக்கு’, ‘அதிகார வர்க்கத்தின் கையில் தான் எப்போதும் நீதி இருக்கும்’, ‘அதிகாரமற்ற மக்களிடம் நீதி கிடைக்கும்போது, அது வேறுபட்டதாக மாறும்’, ‘என்னுடைய தகுதிதான் என் சூழ்நிலைய தீர்மானிக்கிறது’ என பல வசனங்கள் அழுத்தமாகவும், கூர்மையாகவும் எழுதப்பட்டுள்ளன. கரோனா காலக்கட்டத்தின் சாட்சியாக விரியும் படத்தின் காட்சிகள் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் நகரும் விதத்தில் எழுதப்பட்டிருப்பது பலம். 1 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடும் படம் தேவையற்ற காட்சிகளின்றி கச்சிதமான ஆவணப்படமாக கவனம் பெறுகிறது. அத்துடன் துயர்மிகு காலங்களில் ஒற்றுமைக்கான தேவையை பேசும் காட்சிகள் ஈர்க்கின்றன.

மக்களுக்கும் அரசுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவிப்பது, பட்டியலினத்தவராக தன்னுடைய வலிகளை பதிவு செய்து ஆதங்கத்தை வெளிப்படுத்துவது என தேர்ந்த நடிப்பில் ஈர்க்கிறார் ராஜ்குமார் ராவ். அனுபவ் சின்ஹாவின் வழக்கமான நாயகி கதாபாத்திரத்தில் பூமி பெட்னேகர். காரணம் நாயகன் தன் தடத்திலிருந்து வழிமாறும்போது, அவரை நேர்வழிபடுத்தி நியாயத்தை புரிய வைக்கும் மருத்துவராக பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளார்.

வெற்று சாதி பெருமையை பேசுவது, வெறுப்பு அரசியலை உமிழ்ந்து பின் உண்மை உணர்ந்து சாந்தமடைவது, தன் மக்களுக்காக காவல் துறையை எதிர்ப்பது என பங்கஜ் கபூர் பங்கம் செய்துள்ளார். கிருத்திகா கர்மா, டியா மிர்சா நடிப்பு தனித்து தெரிகிறது. தேர்ந்த நடிகர்களும், புலம்பெயர் தொழிலாளர்களாக நடித்தவர்களின் யதார்த்தமான வலிமிகுந்த முக பாவனைகளும் படத்திற்கு பெரும் பலம்.

சௌமிக் முகர்ஜியின் கருப்பு வெள்ளை ஃப்ரேம்கள் உயிரூட்டி திரைக்கும் பார்வையாளருக்குமான நெருக்கத்தை கூட்டியுள்ளன. மிகையின்றி காட்சிகளின் போக்குக்கேற்ப புலம்பெயர் தொழிலாளர்களின் வலியை இசையின் வழியே கடத்தியதில் அனுராக் சைகியாவின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. அதானு முகர்ஜியின் கட்ஸ் படத்தின் நீளத்தை தேவைக்கதிகமாக நீட்டி முழங்காதது கச்சிதம்.

இறுதிக் காட்சியில் சினிமாத்தனம் தென்பட்டாலும் அது பெரிய அளவில் துருத்தவில்லை. மேலும், சில இடங்களில் பிரசாரச் தொனி மிகுந்திருப்பதை தவிர்க்க முடியவில்லை. மொத்தமாக ‘Bheed’ கரோனா காலக்கட்டத்தில் வலிகளையும், துயரங்களையும் எதிர்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களின் அழிக்க முடியாத ஆவணம்.

Related posts