கருணாநிதி நூற்றாண்டு விழா: சென்னையில் இன்று

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி, கடந்த 3-ந் தேதி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், அன்றைய தினம் ஒடிசா மாநிலத்தில் கோர ரெயில் விபத்து நடந்த நிலையில், பொதுக்கூட்டம் உள்பட தி.மு.க.வின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில், கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. ஏற்பாடு செய்துள்ள இந்த பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு வரவேற்று பேசுகிறார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். மேலும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

Related posts