அமர்ந்திருத்தல் எனும் நோய்

ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தில் நம்மில் பலரும் நாற்காலி, சோஃபா, மெத்தை போன்ற ஏதோ ஓர் இருக்கையில் உட்கார்ந்தே கழிக்கிறோம். இப்படி ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பதும் நோய்தான். உட்கார்ந்திருப்பது எப்படி நோயாகும் என்று நாம் நினைக்கலாம்.

ஆனால், காலையிலிருந்து இரவு தூங்கும்வரை நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடல்பருமன், இதய நோய், நீரிழிவு, மன அழுத்தம் ஆகிய பல்வேறு பிரச்சினைகளுக்கு இப்படி உட்கார்ந்தபடி இருப்பது வழிவகுப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இரண்டு மணி நேரம் சாப்பிடுவதற்கு, ஒரு மணி நேரம் பேருந்து, கார், ரயில் பயணத்துக்கு, அலுவலகத்தில் எட்டு மணிநேரம் கணினி பணிக்கு, மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பதற்கு, ஏழு மணி நேரம் தூக்கம் என்றே ஒரு நாளைக் கழிக்கிறோம்.

அப்படிப் பார்த்தால், ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 23 மணி நேரத்தை உடல் உழைப்பின்றிதாம் நாம் கழிக்கிறோம். ஒரு நாளில் மூன்று மணி நேரம் கால்களுக்கு வேலை கொடுப்பவர்கள் இப்போது மிகவும் குறைவு. ஒரு நாளில் ஒரு மணி நேரம் நடப்பவர்களைக்கூட விரல்விட்டு எண்ணிவிடலாம்.

எழுந்து நடக்க வேண்டும்: சமீபகாலம் வரைகூட, மருத்துவ நிபுணர்கள் ‘உட்கார்ந்திருக்கும் நோய்’க்குத் தீர்வாக உடற்பயிற்சியையே கருதினர். ஆனால், தற்போதைய புதிய ஆராய்ச்சிகள் மாற்றுக்கருத்தை முன்வைக்கின்றன. ஒரு நாளில், ஒரு மணி நேரக் கடுமையான உடற்பயிற்சியைவிட ஒரு நாள் முழுவதும் ஏதோவொரு வகையில் உடல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆரோக்கியமானது என்ற கருத்தை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்.

சில தசாப்தங்களுக்கு முன்புவரைகூட, உடற்பயிற்சி என்ற ஒன்றுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லாத சூழல் இருந்தது. ஆனால், இப்போதைய வாழ்க்கைமுறையில் ஒரு நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.

அன்றாடப் பழக்கங்கள்

* வீடு, கடை, அலுவலகம் என எந்த இடத்தில் நடந்தாலும் நீங்கள் எடுத்துவைக்கும் அடியைக் கவனத்துடன் எடுத்துவையுங்கள். ஒவ்வொரு முறை நடக்கும்போது கவனத்துடன் சற்று வேகமாக நடக்க முயலுங்கள். வேகமாக நடப்பது கால் தசைகளை வலிமைப்படுத்தும். அத்துடன் உங்கள் இதயம், நுரையீரலுக்கும் வேகமான நடை சிறந்தது

* லிஃப்டைத் தவிர்த்துவிட்டு எப்போதும் படிக்கட்டுகளை ஏறிப் பழகுங்கள். வாரத்தில் ஐந்து நாட்கள் இரண்டு நிமிடங்கள் படிக்கட்டுகளை ஏறுவது 36 நிமிடங்கள் நடையில் நீங்கள் எரிக்கும் கலோரிகளுக்குச் சமமானது.

* அலுவலகமாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி, சாப்பிடுவதற்கு நாம் முப்பதிலிருந்து நாற்பது நிமிடங்களை ஒதுக்குவது. ஆனால், பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துவிடுவோம். மீதிமிருக்கும் நேரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைவிட, மெதுவாக நடப்பது சிறந்தது.

* நடனமாடுவது மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கும். அதனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நடனமாடுவது உடல் இயக்கத்தை மேம்படுத்தும். நடனமாடுவதற்குச் சிறப்பு நிகழ்ச்சிக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

* வீட்டைச் சுத்தப்படுத்த வார இறுதிக் காகக் காத்திருக்கத் தேவையில்லை. அன்றாடம் சில நிமிடங்களை ஒதுக்குவது சிறந்தது. வீட்டு வேலைகளைச் செய்வதற் காகச் செலவிடும் உடல் இயக்கமும் ‘சைக்கிள்’ ஓட்டுவதற்காகச் செலவிடும் உடல் இயக்கமும் சரிசமமானதுதான்.

* தொலைக்காட்சிப் பார்க்கும் நேரத்தில் கைகளுக்கு வேலை கொடுக்கலாம். நேராக அமர்ந்தபடி, இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து உள்ளங்கைகளை ஐந்து நொடிகளுக்கு அழுத்தலாம். இந்தப் பயிற்சியை நான்கு முறை செய்யலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சி இடைவேளைகளின்போது அமர்ந்தே இருக்காமல் எழுந்து நடக்கலாம்.

* அலுவலகத்தில் கைபேசியில் பேச வேண்டிய தேவையிருக்கும்போது, நாற்காலியில் அமர்ந்தபடி பேசாமல், எழுந்துநின்று அல்லது நடந்தபடி பேசலாம்.

* அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களிடம் பணி தொடர்பாகக் கேட்க வேண்டிய சிறு சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் மின்னஞ்சல் அனுப்பாமல் நேரில் அவர்கள் இடத்துக்கு எழுந்துசென்று பேசலாம். அத்துடன், நாற்காலியில் அமர்ந்தபடி, செய்யக்கூடிய சிறு சிறு உடற்பயிற்சிகளைச் செய்வது சிறந்தது. கூடுமானவரை, நாற்காலியில் முதுகுத்தண்டு வளையாமல் நேராக அமர்வது சிறந்தது.

* பயணம் செய்வதற்குப் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது உடல் இயக்கத்துக்கு நல்லது. வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்திலிருந்தால் பேருந்து நிலையத்துக்கு, ரயில் நிலையத்துக்கு நடந்துசெல்வது சிறந்தது.

* ஆரோக்கியமாக இருப்பதற்கும் வெளியே அதிகநேரம் செலவிடுவதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. இயற்கையோடு தொடர்பில் இருப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான சிறந்த வழி. ஒரு வாரத்தில் ஒரு மணி நேரமாவது இயற்கைச் சூழலில் இருப்பதற்குத் திட்டமிடுவது உடல் இயக்கத்துக்குச் சிறந்தது என்று சொல்கின்றனர் நிபுணர்கள்.

– தொகுப்பு: கனி

Related posts