உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடலின் போதே மீண்டும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு அல்லது தேர்தலுக்கு போதிய நிதி வழங்கப்படுவதை பொறுத்து தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தேர்தல்‌ ஆணைக்குழுவின்‌ அறிவுறுத்தலை‌ பெற்றதன்‌ பின்னர்‌ மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால்‌ தேர்தல்களை நடாத்துவதற்கான திகதியைத்‌ தீர்மானிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 09ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்த நிலையில் அதனை நடத்தாதிருக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மற்றும் திறைசேரியினால் நிதி வழங்கப்படாமை உள்ளிட்ட காரணங்களினால் இம்மாதம் 25ஆம் திகதி அதனை பிற்போடுவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது தடவையாக குறித்த தினத்தில் தேர்தலை நடாத்துவதை ஒத்திவைக்க ஆணைக்குழு முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் நேற்று (10) பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் தேர்தல்கள் ஆணைக்குழு சந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு, இதில் திட்டமிட்ட படி இம்மாதம் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது கடினம் என, அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு…

தேர்தல்‌ ஆணைக்குழு உள்ளூர்‌ அதிகார சபைகளின்‌ தேர்தல்களை உரியவாறு நடாத்துவதற்காக பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும்‌ கூட பணிகளை மேற்கொண்டதோடு, அதற்குத்‌ தேவையான நிதி கிடைக்கப்‌ பெறாமை மற்றும்‌ ஆணைக்குழுவின்‌ கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்திலான விடயங்கள்‌ என்பவற்றின்‌ காரணமாக, 2023.04.25 ஆம்‌ தேதியன்று நடாத்தப்படவிருந்த தேர்தல்களை இரண்டாவது முறையும்‌ ஒத்திவைக்க வேண்டியுள்ளது.

ஆதலால்‌ உரிய உள்ளூர்‌ அதிகார சபைகளின்‌ தேர்தல்களை நடாத்துவதற்குத்‌ தேவையான நிதி கிடைக்கப்‌ பெறுகின்ற குறிப்பான திகதி அல்லது உயர்‌ நீதிமன்றத்தின்‌ முன்னால்‌ காணப்படுகின்ற வழக்குகளுக்கமைய கெளரவ நீதிமன்றத்தினால்‌ வழங்கப்படுகின்ற தீர்ப்பின்‌ அடிப்படையில்‌ ஒரு திகதியை தீர்மானிக்க வேண்டிவரின்‌ அத்திகதி ஆகிய இரண்டு திகதிகளில்‌ முதலில்‌ வரக்கூடிய தினத்தன்று உள்ளூர்‌ அதிகார சபைகளின்‌ தேர்தல்களை நடாத்துவதற்கான திகதியைத்‌ தீர்மானித்தல்‌ தேர்தல்‌ ஆணைக்குழுவின்‌ அறிவுறுத்தலைப்‌ பெற்றுக்‌ கொண்டதன்‌ பின்னர்‌ மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால்‌ மேற்கொள்ளப்படவுள்ளது.

எவ்வாறாயினும்‌ தேர்தல்‌ ஆணைக்குழு உள்ளூர்‌ அதிகார சபைகளின்‌ தேர்தல்களை துரிதமாக நடாத்துவதற்கு எடுக்க முடிந்த அனைத்து செயல்பாடுகளையும்‌ தொடர்ச்சியாக முன்னெடுத்துச்‌ செல்லுமெனவும்‌ அறிவிக்கப்படுகின்றது.

Related posts