திட்டங்களுக்கு சில இனவாத தமிழ் தலைவர்களே தடை

அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வரும் இவ்வேளையில், இனவாதத்துடன் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளே அதற்கு ஒத்துழைப்பதில்லையென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை,

வடக்கின் விவசாயத்துறை பாதிப்புக்கு தற்போதுள்ள நாட்டின் தலைவரோ இதற்கு முன்பு இருந்த தலைவரோ பொறுப்பல்ல. விடுதலைப்புலிகளே வடக்கின் விவசாயத் துறையை அழித்தனரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் ஒருபோதும் இனவாதத்துடன் செயல்படுவதில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கிலுள்ள தொழிற்சாலைகளின் உபகரணங்களையும் கொண்டு சென்றவர்கள் புலிகளே. இதையும் தமிழ் அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நெல் கொள்வனவு மற்றும் விவசாயத்துறை திட்டங்கள் தொடர்பில் ஸ்ரீதரன் எம்பி சபை விவாதத்தின் போது தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளை மீதான சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பியான ஸ்ரீதரன், வடக்கில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் அங்குள்ள விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்கள் கிடைப்பதில்லையென்றும் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

அரசாங்கம் 100 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்து அதன்மூலம் மக்களுக்கு நிவாரணமாக அரிசியை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

Related posts