விஜய், அஜித் ரசிகர்களுக்கு கிட்டியது என்ன?

விஜய்யின் ‘வாரிசு’ அஜித்தின் ‘துணிவு’ இரண்டு படங்களுமே பொங்கலையொட்டி வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் இரண்டு படங்களுக்குமான சில ஒப்பீடுகளைப் பார்ப்போம்.

அஜித் – விஜய் இருவரும் தமிழ்நாட்டின் இரண்டு உச்ச ‘மாஸ்’ நடிகர்கள். இருவரையும் ஏதோ ஒரு வகையில் வழக்கத்திற்கும் மாறான தோற்றம், உடல்மொழியின் மூலம் திரையில் ஜோலிக்க வைத்திட வேண்டும் என்பதில் இரு தரப்பு இயக்குநர்களும் தெளிவாக இருந்துள்ளனர்.

ஃபேமிலி ஆடியன்ஸ், சென்டிமென்ட், கருத்து சொல்ல வேண்டும் என்பதையெல்லாம் கடந்து ரசிகர்கள் விரும்பும் அந்த ‘மாஸ்’ நடிகரை பட்டைத் தீட்டி மெருகேற்றி திரையில் முழுமையான ட்ரீட்டை கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் வம்சிக்கும், ஹெச்.வினோத்துக்கும் மிக முக்கியமான முதல் அசைன்மென்ட். அந்த அசைன்மென்ட்படி, ‘மாஸ்’ நடிகர்களை ‘க்ளாஸ்’ ஆக காட்டிய விதத்தில் இரண்டு இயக்குநர்களும் ‘பாஸ்’ மார்க் வாங்குகின்றனர்.

வாரிசு’ படத்தில் வின்டேஜ் விஜய்யை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டடனர். விஜய்யின் அந்த சின்னச் சின்ன நெளிவு சுளிவுகள், காமெடிகள், சைல்டிஷ் முகபாவனைகள், உடல்மொழி, பிரகாஷ்ராஜுடன் செய்யும் ரகளை என ‘சச்சின்’ காலத்து விஜய்யை கண்முன் நிறுத்தியுள்ளார் வம்சி. அதேபோல விஜய் இறங்கி அடித்து ஸ்கோர் செய்யும் நடனக் காட்சிகளை முடிந்த அளவுக்கு எந்தெந்த இடங்களிலெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்தி ரசிகர்களை உற்சாகமூட்டியிருக்கிறார். குறிப்பாக ‘செலிபிரேஷன் ஆஃப் வாரிசு’ ட்ராக்கில் விஜய் ஆடும் நடனம் அதற்கு உதாரணம். அதேபோல ‘ரஞ்சிதமே’ பாடலின் கடைசி நிமிட ஆட்டம் அடுத்த பொங்கல் வரை சிலாகிக்கப்படும் என்பது உறுதி. இப்படியாக இயக்குநர் வம்சி மொத்த கவனத்தையும் விஜய்யின் மீது குவித்திருப்பது தெளிவாகிறது.

அதேபோல ‘துணிவு’ படத்தில் அஜித்தின் ஸ்கிரீன் ப்ரசன்ஸை மொத்தமாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ஹெச்.வினோத். ‘மங்காத்தா’ பட வில்லத்தனமான சிரிப்பு, ஈர்க்கும் ஒயிட் அண்ட் ஒயிட் ‘ஸ்மார்ட்’ லுக், மைக்கேல் ஜாக்சனின் அந்த ‘மூன்வாக்’ ஸ்டெப் என ஒரு ரசிகர் மனபான்மையிலிருந்து அஜித்தை அவர் உருமாற்றியிருப்பது ‘துணிவு’ பொங்கல் என ரசிகர்கள் ஆர்பரிப்பதற்கு நியாயம் சேர்க்கிறது. மொத்தமாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக அசால்ட்டான ஒரு கதாபாத்திர வடிவமைப்பு அஜித்துடையது. அது ரசிகர்களுக்கு இன்னும் கூடுதல் எனர்ஜி.

‘வாரிசு’ விஜய், ‘துணிவு’ அஜித் இருவரின் கதாபாத்திரங்களும் ஜாலியான, நடனங்களில் ஸ்கோர் செய்யும் கதாபாத்திரங்களாக தெரிந்தோ தெரியாமலோ வம்சி, ஹெச்.வினோத்தால் அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. காரணம், இதற்கு முன்பு ‘பீஸ்ட்’ படத்தில் விஜய், நெல்சன் நாயகர்களுக்கே உண்டான இறுக்கத்துடனே இருப்பார். ‘வலிமை’ படத்தில் சீரியாஸான போலீஸாக அஜித்தின் கதாபாத்திரம் அதன் மீட்டரில் தங்கும். அப்படியான இறுக்கங்கள் இந்த பொங்கலில் இல்லை என்பதை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

அதேபோல இரண்டு நடிகர்களின் ரசிகர் பட்டாளத்தையும், ‘ட்ரால்’ ஆகிவிடக் கூடாது என்பதையும் மனதில் வைத்து இசையமைப்பாளர்கள் தமனும், ஜிப்ரானும் இறங்கி அடித்துள்ளனர். இரண்டு படங்களின் பின்னணி இசையும், பாடல்களும் 2கே கிட்ஸ்களின் ஆதர்ச ‘வைப்’ மனநிலையை உருவாக்குகின்றன. இங்கே ‘கேங்க்ஸ்டா’ என்றால் அங்கே ‘தீ தளபதி’. முடிந்த அளவுக்கு இரண்டு இசையமைப்பாளர்களும் உழைப்பை கொட்டியிருப்பதை மறுக்கமுடியாது.

இரண்டு படங்களும் அக்‌ஷனில் ஸ்கோர் செய்தாலும், ‘துணிவு’ படத்தின் சண்டைக் காட்சிகள் சில இடங்களில் முன்னேறுகிறது. சென்டிமென்ட் களத்தில் ஒப்பிட்டால் ‘வாரிசு’ அம்மா – மகன் சென்டிமென்ட் சில இடங்களில் ஒட்ட, ‘துணிவு’ அதற்கான முகாந்திரத்தை வைத்திருந்தும் உணர்வுகளில் கோட்டைவிட்டிருக்கிறது.

பெண் கதாபாத்திர வார்ப்பில் ‘துணிவு’ மஞ்சு வாரியர் துணிந்து இறங்கி அடிக்கிறார். ‘வாரிசு’ ராஷ்மிகா வெறும் காதலுக்காக, பாடலுக்காக மட்டுமே ஒட்டிக்கொள்கிறார். கதாபாத்திர வரிசையில் ‘துணிவு’ படத்தின் மோகனசுந்தரம், பக்ஸ், மகாநதி ஷங்கர், துணை கதாபாத்திரங்கள் கதைக்கு வலுசேர்க்கின்றன. ‘வாரிசு’ படத்தின் உறுதுணைக் கதாபாத்திரங்களுக்கான எழுத்து பலமாக இல்லை என்பதை திரையில் உணர முடிகிறது. இதையெல்லாம் தாண்டி இரண்டு படங்களில் வில்லன் கதாபாத்திரங்களும் பலவீனமாக எழுதப்பட்டிருக்கும் புள்ளியில் இரு படங்களும் ஒன்றிணைகின்றன.

இரண்டு படங்களும் கருத்தியல் ரீதியாக சில பிழைகளை தவிர்க்க முடியாமல் தவிக்கின்றன. ‘வாரிசு’ ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களை குற்றவாளிகளாக்கியும், ‘துணிவு’ திருநங்கை ஒருவரின் உடல்மொழியை கண்ணியம் சிதைத்தும் காட்டி 2023-ல் நிகழத்த வேண்டிய மாற்றத்திலிருந்து பின்தங்கியிருக்கிறது.

இறுதியாக கதை, திரைக்கதையின் அடிப்படையில் பார்க்கும்போது, வம்சியிடமிருக்கும் வழக்கமான பார்த்து பழகிய, கணிக்கக் கூடிய கதையும், அதன் க்ளிஷே காட்சிகளின் இலக்கும் சொல்ல வருவது ஒன்றுதான். அது சென்டிமென்ட். குடும்பங்களை ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் கதை ‘சென்டிமென்ட்’ என்ற அதன் எல்லையும் சுருங்கி முடிந்துவிடுகிறது. ஆனால் ‘துணிவு’ ஒரு வெயிட்டான மெசேஜை கதைக்குள் கொண்டிருக்கும் விதத்தில் புதுமை சேர்க்கிறது. வங்கிகள் சாமானியர்கள் மீது நிகழ்த்தும் அத்துமீறல்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி ஒருவித கருத்தை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.

உண்மையில் சிறிய படங்களைக் காட்டிலும் பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் வழியே கடத்தப்படும் கருத்து வெகுஜன பார்வையாளர்களை எளிதில் சென்று சேர்ந்துவிடுகிறது. அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ‘வாரிசு’ முடிந்து வீட்டுக்கு திரும்பும் பார்வையாளர்கள் சென்டிமென்டையும், ‘துணிவு’ முடிந்து வீட்டுக்கு செல்லும் பார்வையாளர்கள் வங்கிகளிடம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய விழிப்புணர்வையும் எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.

( “இரண்டு படங்களுமே தரமான படங்கள் அல்ல” என்ற பலத்த விமர்சனத்தை இந்த ஆக்கம் மண் போட்டு மூடியுள்ளது.)

Related posts