அடிவாங்குவது என்னவோ வில்லன்கள் தான்..‘லத்தி’

குற்றவாளியை தண்டிப்பதற்காக காவல் துறை கான்ஸ்டபிள் ஒருவர் கையிலெடுக்கும் ‘லத்தி’ என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் ஒன்லைன்.
கட்டிமுடிக்கப்படாத அந்தக் கட்டிடத்தில் அங்கும் இங்கும் ஒரே பரபரப்பாக ரவுடிகள் ஓடிக்கொண்டு யாரோ ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படியே கட் செய்தால் வீட்டில் மனைவி, குழந்தையுடன் கான்ஸ்டபிள் முருகானந்தம் (விஷால்). பணியிடை நீக்கத்தால் 6 மாதமாக வீட்டிலிருக்கும் முருகானந்தம் மீண்டும் பணியில் சேர அதிகாரிகளை நாடுகிறார்.

அப்படி ஒரு மேலதிகாரியின் பரிந்துரை க்ளிக் ஆக, ஹேங்கரிலிருக்கும் தூசிபடிந்த காக்கிச்சட்டையை மீண்டும் அணிந்து பணிக்கு செல்லும் அவரிடம் உயரதிகாரி ஓர் உதவியை நாட, அது முருகானந்தத்தை பாதிக்கிறது.

அது என்ன உதவி? முருகானந்தம் ஏன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்? அவருக்கும் வில்லனுக்கும் என்னதான் பிரச்சினை? – இவற்றை ஆக்‌ஷன் சண்டைக்காட்சிகளை மட்டுமே வைத்து சொல்லியிருக்கும் படம் ‘லத்தி’.

ஒரு பெரிய கும்பலை ஒரே ஆளாக சிங்கிள் லத்தியுடன் விஷால் அடக்கும் காட்சியிலேயே படம் பக்கா ஆக்‌ஷன் மசாலா என்பதை இயக்குநர் வினோத் புரிய வைத்துவிடுகிறார். அதற்கு பார்வையாளர்களை தயாராகிக்கொண்டிருக்கும்போது, ‘நம்ம ஹெல்ப்லஸ் தான் ஹோப்லஸ் இல்ல’, ‘பயப்பட்ற விஷயத்துக்கு எதிராக சண்டை போடணும், இல்லன்னா நகர்ந்திடணும் (fight or fly), ‘Thinking will not over come fear. But action will’ போன்ற வசனங்கள் படத்தின் மீதான நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.

நடுத்தர குடும்பத்தைச்சேர்ந்த கான்ஸ்டபிளை பிரதிபலிக்கும் விஷால், நடிப்பில் யதார்த்தத்தை கூட்டுகிறார். சென்டிமென்ட்டில் ஸ்கோர் செய்யும் அவரின் நடிப்பு தன் மகனுக்காக கெஞ்சும் இறுதிக்காட்சியில் மீட்டரைத் தாண்டியிருப்பதை உணர்த்துகிறது.

அதேசமயம் கதாபாத்திரத்திற்கான உழைப்பையும், சண்டைக்காட்சிகளில் அவரது மெனக்கெடலும் திரையில் பளிச்சிடுகிறது. சுனைனா, பிரபு, மாஸ்டர் லிரிஷ் ராகவ், தலைவாசல் விஜய், முனிஷ்காந்த், ரமணா, வினோத் சாகர் கதைக்கு தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர்.

முதல் பாதியில் நல்ல தொடக்கத்துக்கான அம்சங்களைக் கொடுக்கும் படம், இரண்டாம் பாதியில் அதனை மறக்கடிக்கும் விதமான ஓவர் டோஸ் சண்டைக்காட்சிகளால் சோர்வை ஏற்படுத்திவிடுகிறது. குறிப்பாக, தர்க்க ரீதியான மீறல்களை கண்டுகொள்ளாமல் படம் தேமேவென நகர்வதுதான் பெரிய சிக்கல்.

டிஐஜி தரத்திலிருக்கும் அதிகாரியால் ரவுடி ஒருவரை தண்டிக்க முடியாமல் போவது, காவல் துறை, அரசியல் கட்சியினர் என அனைவரும் பயப்படும் தாதா ஒருவரை விஷால் சிங்கிள் ஆளாக கொல்வது, குறிப்பாக இரண்டாம் பாதியில் நூற்றுக்கணக்கான ரவுடிகளை அடித்து துவம்சம் செய்யும் அவர், இரும்புக் கம்பியை லத்தியைக்கொண்டு எதிர்ப்பது…

இதையெல்லாம் கடந்து, கத்தி குத்து, முதுகில் அரிவாள் வெட்டு, காலில் ஆணிக் குத்து, ரத்தம் வழியும் முகத்துடன் ஃபுல் எனர்ஜியுடன் இருக்கும் நாயகனை இன்னும் தமிழ் சினிமா மறக்கவில்லை.

தவிர, சக காவலர் ஒருவர் ஆபத்தில் இருப்பதை அறிந்தும் சைலன்டாக இருக்கும் காவலர்கள், மண்ணில் புதைந்தும் மீண்டும் எழுந்து வரும் விஷாலின் மகன், வில்லன் ராணா பாலித்தீன் கவரை மாஸ்காக்கி அதற்கு மாஸாக சொல்லும் காரணங்கள் பெரும் அயற்சி. ஒரு சீனில் வைக்கப்படும் சண்டைக்காட்சியில் இரண்டாம் பாதி முழுக்க வைத்து இழுத்திருப்பது சோர்வு. இதனிடையே கதையில் வரும் சின்ன ட்விஸ்ட் படு செயற்கைத்தனம்.

கண்டிக்க அடிக்கலாம்’, ‘உங்கள மாதிரி ரவுடிகள அடிக்கிறது உயர் அதிகாரிகள் எங்களுக்கு தர ஆஃபர்’ என்பது சாமானியர்கள் மீதான காவல் துறையினரின் அத்துமீறல்களையும், அடிப்பதுதான் தீர்வு என்பதை தொடர்ந்து நிறுவுவதன் மூலம் சட்டத்தை மீறுவதும் நெருடல்.

காவல் துறையினரின் ‘லத்தி’ அடியை ரொமான்டிசைஸ் செய்யும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பெரும் பலம். ‘சண்டைக்கோழி’ படத்தின் க்ளைமாக்ஸ் பிஜிஎம்-ஐ மறுஆக்கம் செய்திருக்கும் உணர்வைக் கொடுத்தாலும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பாலசுப்ரமணியெம், பாலகிருஷ்ணா ஒளிப்பதிவும், பீட்டர் ஹெயினின் ஸ்டன்ட்டும் கவனிக்கவைக்கிறது.

மொத்தத்தில் ஆக்‌ஷன் மசாலாவாக உருவாகியிருக்கும் ‘லத்தி’ தர்க்கப் பிழைகளை கண்டுகொள்ளாமல், எதிரிகளை அடித்து துவைக்கிறது. அடிவாங்கியது என்னமோ வில்லன்கள்தான் என்றாலும், அலறியது..?

Related posts