ரணில் – சம்பந்தன் ஒப்பந்தம் ?

தமிழ் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ரணில் விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று பாராளுமன்றில் வலியுறுத்தினார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்பதாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனவே, விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தம் மூலம் அதற்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

அதே வேளை, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற போதும் சமஷ்டி முறையிலான தீர்வு என்று வரும்போது அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான ஆறாவது நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ந்து சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை மட்டும் வழங்காமல் அரசாங்கம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது எமக்கான மாதம் எமது மண்ணுக்காகவும் உரிமைக்காகவும் போராடி வீர மரணமடைந்த எமது வீரர்களை இந்த வேளையில் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

1978 ஆம் ஆண்டு எமது இளைஞர்களின் கைகளில் இருந்த பேனா பறிக்கப்பட்டு ஆயுதம் வழங்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை ஊடாக அரசியல் உரிமைக்காக போராடி, பெரும்பான்மை சமூகத்தின் அரசாங்கங்களினால் ஏமாற்றப்பட்டதன் பின்னரே ஆயுத போராட்டம் தோற்றம் பெற்றது.

1956 ஆம் ஆண்டிலிருந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட தந்தை- செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாததாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த நேர்ந்தது.

தமிழ் மக்களின் உரிமைக்காக தமிழரசுக் கட்சி 75 வருட காலமாக போராடுகிறது.தந்தை செல்வாவின் காலத்தில் கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் சேயோன் ஒருமுறை ‘தமிழ் சமூகம் பீனிக்ஸ் பறவை போல் அழிக்க அழிக்க மீண்டும் வருவோம்’ என குறிப்பிட்டார்.

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் குறிப்பிடவில்லை.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்காத காரணத்தினால்தான் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் எங்கும் சுட்டிக் காட்டவில்லை.

எமக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டால் நானும் தொடர்ந்து போராடுவேன். தீர்வு வழங்கப்படாவிட்டால் சுதந்திரத்திற்கு பின்னரான 75 ஆண்டுக்கு பின்னரும் மீண்டும் அமிர்தலிங்கம், சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன் போன்றோர் தோற்றம் பெறுவார்கள்.

அந்த வகையில் எமது அரசியல் உரிமையை ஒருபோதும் மறுக்க முடியாது.மீண்டும் எமது அரசியல் உரிமைக்காக காலம் காலமாக போராடுவோம். தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற போதும் சமஷ்டி அடிப்படையில் தீர்வு என்று வரும் போது அனைத்து கட்சிகளும் அதற்காக ஒற்றுமையுடன் செயல்படும்.

கருத்து முரண்பாடுகளுக்காக தமிழ் மக்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts