சேத்துமான் – யதார்த்த கலைப் படைப்பு

இரண்டு வெவ்வேறு இழப்புகளுக்கு காரணமாகிறது இரண்டு வெவ்வேறு இறைச்சிகள். ஏன்? எப்படி? எதனால்? – இதுதான் ‘சேத்துமான்’ சொல்லும் செய்தி.
பொட்டல் காட்டில், உச்சி வெயிலில் தன் தாத்தாவுடன் நடந்து செல்லும் குமரேசன், ‘பள்ளிகூடத்துல டீச்சர் என்கிட்ட, நீ எல்லா கறியும் சாப்பிடுவியா?’னு கேட்டாங்க, அதுக்கு நான் ‘எல்லாமே சாப்பிடுவேன்’னு சொன்னதும் சிரிச்சாங்க. ‘ஏன் தாத்தா கறி சாப்பிட்றது தப்பா?’ என கேட்கிறான். சமகால சாதிய, மத, அரசியலுடன் பிணைக்கப்பட்ட முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்வியை மையமாக கொண்டு அழுத்தமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது ‘சேத்துமான்’.
மேற்கு தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு நடக்கிறது கதை. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் ஊருக்கு வெளியே தனது பேரன் குமரேசன் (அஸ்வின்) உடன் வாழ்ந்து வருகிறார் பூச்சியப்பா (மாணிக்கம்). மாட்டுக்கறியை சாப்பிட்டதால் ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாய், தந்தையை இழுந்து தவிக்கும் குமரேசனுக்கு தாத்தா பூச்சியப்பாதான் எல்லாமுமே.
குமரசேனை எப்படியாவது படிக்க வைத்து, நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என ஓயாது உழைக்கிறார் பூச்சியப்பா. கூடைப் பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கும் அவர், அந்த ஊரில் உள்ள பண்ணையாரான வெள்ளையனுக்கு (பிரசன்னா பாலசந்திரன்) உதவியாகவும் இருந்த வருகிறார். இதனிடையே வெள்ளையனும் அவரது குழுவும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்படுகின்றனர். இறுதியில் அவர்களின் விருப்பத்தால் ஏற்பட்ட விபரீதம் குறித்த அழுத்தமான காட்சிகளால் யதார்த்ததுக்கு நெருக்கமான படைப்பாக உருவாகியுள்ளது ‘சேத்துமான்’.
பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் வரும் மே 27-ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கும்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதைதான் ‘சேத்துமான்’ ஆக திரை ஆக்கம் பெற்றிருக்கிறது. தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாணிக்கம் வாழ்த்திருக்கிறார். துறுத்தல் இல்லாத நேர்த்தியான நடிப்பு. எந்த இடத்திலும் அவரது நடிப்பை பார்க்க முடியவில்லை, தனக்கு முன்னால் கேமரா இருக்கிறது என்பதை மறந்து அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். அதேபோல, பேரனாக வரும் அஸ்வின் குறும்புத்தனத்திலும், தாத்தாவுடனான பிரியத்தை காட்டுவதிலும், இறுதிக்காட்சியிலும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இருவரின் நடிப்பும் படத்துக்கு மிகப்பெரிய பலம்.
அடுத்தாக பண்ணையார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘நக்கலைட்ஸ்’ யூடியூப் சேனல் புகழ் பிரசன்னா பாலசந்திரன் சிடு சிடுவென முகத்தை வைத்துக்கொண்டு, பண்ணையாருக்கே உரித்தான உடல்மொழியில் அசத்தியிருக்கிறார். தவிர, சுப்ரமணி கதாபாத்திரத்தில் நடித்த சுருளி, ரங்கனாக வரும் குமார், வெள்ளையன் மனைவியாக வரும் சாவித்திரி உள்ளிட்டோரின் தேர்ந்த நடிப்பு படத்துடன் ஒன்ற உதவுகிறது.
பெரும்பாலும் சாதிய வன்மத்தை பேசும் படங்கள் தென்தமிழகத்தை கதைக்களமாக கொண்டிருக்கும். ஆனால், இந்தப் படம் அதிலிருந்து விலகி, மேற்கு தமிழ்நாட்டில் நிலவும் பண்ணையார் அடிமை முறை காட்சிப்படுத்தியுள்ளது. படம் தொடங்கியதிலிருந்து ரேடியோ, பேப்பர் வழியாக குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் பதவி ஏற்கிறார் என்ற செய்தி காட்சிகளுக்கு பின்புறம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அதேசமயம் குடியரசுத் தலைவர் பதவி கிடைத்தாலும், உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் ஒடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக படம் பதிவு செய்கிறது. இந்த நகை முரண் திரைக்கதையை அடர்த்தியாக்குகிறது. நெடிய வசனங்கள் உணர்த்தும் அரசியலை இந்த இரண்டு முரண்பட்ட காட்சிகள் அநாயசமாக கடத்துகிறது.
படத்தில் பூச்சியப்பா, ரங்கன் என்ற ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு கதாபாத்திரங்கள் காட்டபடுகின்றன. ரங்கன் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார்; தனது உரிமையை கேட்டு பெற வற்புறுத்துகிறார். பூச்சியப்பா தனது சூழ்நிலை காரணமாக அமைதி காக்கிறார். இதில் பூச்சியப்பாவை நோக்கி ‘கையில சுய தொழில் இருந்தா யாருக்கும் அடிமையாக இருக்கவேண்டியதில்லை’ என ரங்கன் பேசும் காட்சியில் பொருளாதார நிலை மேம்பாடு சாதிய ஏற்றத்தாழ்வுகளிலிருந்து மீட்கும் ஒரு கருவி என்பதையும் படம் பதிவு செய்கிறது.மேலும், படத்தில் வரும் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. ‘அவங்க குடிச்ச கிளாஸ்ல நான் டீ குடிக்கணுமா’ என ஒடுக்கப்பட்ட பூச்சியப்பா பேசுவது, ‘அவங்கள்லாம் இப்போ பேச கத்துகிட்டாங்க. இது அவங்க நேரம்’ என பண்ணையார் பேசுவது சமகால சாதி பாகுபாட்டில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்த்துகிறது.
இதை தவிர, தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான உறவு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் நீளம் சற்றே சோர்வைத் தருகிறது. சேத்துமான் இறைச்சியை அவர்கள் சமைக்கும் விதத்தைப் பார்த்தால் நமக்கே பசிக்கிறது.
அந்தப் பொட்டல் காட்டில் தாத்தாவும் பேரனும் நடந்து செல்லும்போது நமக்கு மூச்சு வாங்குகிறது. அதை நமக்கு கடத்துவதில் பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு முக்கிய பங்காற்றுகிறது. பல இடங்களில் வரும் லெந்த் ஷாட்டுகள், தொடக்கத்தில் வரும் வொயிட் ஆங்கிள் ஷாட், எதார்த்ததுக்கு நெருக்கமாக படத்தைக் கொண்டு செல்ல பெரிதும் உதவுகிறது. பிந்து மாலனியின் பிண்ணனி இசையும், பாடல்களும் வித்தியாசமான திரை அனுபவதிற்கு உதவுகின்றன.
மொத்தத்தில் ‘சேத்துமான்’ உணவு அரசியலையும், சாதிய கட்டுமானத்தையும் விசாரணைக்கு உட்படுத்தும் கலைப் படைப்பு.

Related posts