ஹாலிவுட்டில் கவனம் செலுத்தும் நீது சந்திரா

ஹாலிவுட்டில் கவனம் செலுத்தும் நீது சந்திரா, ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்காகவே கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருவதாக கூறினார்.

தமிழில் மாதவன் ஜோடியாக யாவரும் நலம் படத்தில் நடித்து பிரபலமானவர் நீது சந்திரா. தொடர்ந்து விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை, ஆர்யாவின் சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கராத்தே பயிற்சி பெற்றவர். நீது சந்திரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த நெவர் பேக் டவுன்: ரிவோல்ட் என்ற ஹாலிவுட் படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து இருந்தார்.

நீது சந்திரா அளித்துள்ள பேட்டியில், “எனக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைக்க மறைந்த நடிகர் இர்பான் கான் காரணம். அவர்தான் ஹாலிவுட்டில் உள்ள சில ஏஜெண்டுகளை தொடர்பு கொள்ள உதவி செய்தார். ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்காகவே கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறேன். நான் தற்காப்பு கலையைக் கற்றுள்ளதால், அதுபோன்ற படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. இந்தியாவில் அதற்கான வாய்ப்பு இல்லை. அதனால்தான் ஹாலிவுட் பட வாய்ப்புகளை தேடுகிறேன்’’ என்றார்.

Related posts