‘மின்னல் முரளி’ தமிழ் ரீமேக் உரிமை

மின்னல் முரளி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது
பேசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடித்த படம் ‘மின்னல் முரளி’. சூப்பர் ஹீரோ கதைக்களத்தைக் கொண்ட இப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்திய பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டு தெரிவித்தனர். உலகம் முழுவதும் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ‘மின்னல் முரளி’ நெட்ஃப்ளிக்ஸ் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

படத்தைப் பார்த்த கரண் ஜோஹர், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் டொவினோ தாமஸுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மார்வெல், டிசி காமிக்ஸுக்கு நிகரான ஓர் இந்தியப் படைப்பு என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் இப்படத்துக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ‘மின்னல் முரளி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ‘மின்னல் முரளி’ படத்தை தயாரித்த வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர்ஸ் நிறுவனத்திடம் பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னணி ஹீரோ இதில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘மின்னல் முரளி’ எப்படி? – ‘இந்து தமிழ் திசை’யின் முதல் பார்வையிலிருந்து சில பகுதிகள்:ஒரு சூப்பர் ஹீரோ அல்லது சூப்பர் வில்லன் கதாபாத்திரத்துக்குத் தேவை, ஒரு வலுவான பேக் ஸ்டோரி. அது இல்லையென்றால் திரைக்கதையில் என்ன ஜாலத்தைப் புகுத்தினாலும் அது கம்பி கட்டும் கதையாகி விடும். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் இருவருக்குமே மிக வலுவாகப் பின்னணிக் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் இருவருமே சராசரி மனிதனுக்குரிய இயல்பான குணநலன்களுடனேயே இருக்கின்றனர். சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் அவர்களை அவரவர் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது என்பதைப் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்துவிடுகிறார் இயக்குநர் பேசில் ஜோசப்.

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல ‘மின்னல் முரளி’. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் நாம் பார்க்கும் விமானத்தைத் தாங்கிப் பிடிப்பது, ஊரில் இருக்கும் கட்டிடங்களை எல்லாம் ஹீரோவும் வில்லனும் கட்டிப்புரண்டு தவிடு பொடியாக்குவது போன்ற பிரம்மாண்டக் காட்சிகள் எதுவும் இதில் கிடையாது. நம் பக்கத்துத் தெருவில் ஒரு சூப்பர் ஹீரோ இருந்தால் எப்படி இருப்பான்? அதற்கு சமமான சக்திகள் கொண்ட இன்னொரு எதிரியை அவன் சந்தித்தால் என்ன நடக்கும்? – இதைத்தான் மின்னல் முரளி’ பேசுகிறது.

Related posts