அன்புமணிக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்

நடிகர் சூர்யாவைத் தொடர்ந்து விமர்சித்து வருவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ‘ஜெய் பீம்’ படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் நேற்று சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவைத் தொடர்ந்து விமர்சித்து வருவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று உஷா ராஜேந்தர் தலைமையிலான தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அன்புமணிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:’நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தீர்கள். அந்தக் காட்சி தொழில்நுட்பக் கலைஞர்களின் தவறான புரிதலால் இடம்பெற்றுள்ளதை அறிந்து தங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை உடனடியாக திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா நீக்கிவிட்டார். அந்த முத்திரை இடம்பெற்றதில் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான நடிகர் சூர்யாவிற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை. இருப்பினும் தங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் நடிகர் சூர்யாவைத் தொடர்ந்து விமர்சித்து வருவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. இந்தச் செயல் மிகவும் வருத்தமளிக்கிறது.
அரசியல், சாதி, மத, இனச் சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன் விளிம்புநிலை மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களது கல்விப் பணியில் பெரும் பங்கெடுத்துச் செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்”.இவ்வாறு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts