நான் கடந்த காலத்தில் நடந்ததை தான் பேசினேன்

இனச் சுத்திகரிப்பு தொடர்பாகவும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பாகவும் யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் எம்.பி பாராளுமன்றத்தில் உரையாற்றியதால் நேற்று (13) சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் தலைமையில் கூடியது. முதலாம் நாள் பட்ஜட் விவாதத்தில் உரையாற்றிய எஸ். சிறீதரன் எம்.பி சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு சமஷ்டி அதிகாரம், இனச்சுத்திகரிப்பு போன்ற விடயங்கள் பற்றி உரையாற்றினார்.

ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த சுதர்சன் தெனிபிட்டிய எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில் எஸ். சிறீதரன் எம்.பி. இன சுத்திகரிப்பு பற்றியும் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்ததாகவும் பேசினார். இதன் மூலம் தவறான கருத்தே உலக நாடுகளுக்கு செல்லும். பௌத்த நாட்டை உருவாக்க முயல்வதாக தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் நடத்தப்படவில்லை. பயங்கரவாத்திற்கு எதிராகவே யுத்தம் நடந்தது என்றார்.

இதற்குப் பதிலளித்த எஸ். சிறீதரன் எம்.பி நான் கடந்த காலத்தில் நடந்ததை தான் பேசினேன் என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சாந்த பண்டார எம்.பி ,

பிரதமருடன் பேசுவதற்கு எமது கட்சியில் அங்கத்துவம் பெறத் தேவையில்லை. தமிழ் தேசிய எம்.பியாக உங்கள் பிரச்சினைகளை அவருடன் பேசலாம்.அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் சேவையாற்றலாம்.வடக்கு கிழக்கில் சுதந்திரமாக வாழும் நிலையை மஹிந்த ராஜபக்ச தான் ஏற்படுத்தினார் என்றார்.

இதற்குப் பதிலளித்த எஸ். சிறீதரன் எம்.பி நாம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இதற்கு முன்னர் 13 தடவை பேசியுள்ளோம். அரசாங்கத்துடன் பேச நாம் தயாராக இருக்கிறோம்.

Related posts