சேர்ந்து பயணிக்கவே அரசு விரும்புகிறது

அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் அமைச்சர்கள் தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பிரச்சனைக்கு தீர்வு கண்டு இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

அதேவேளை,நாடு முகம் கொடுத்துள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர்கள் என்ற வகையில் நாடு தொடர்பில் சிந்தித்து செயல்படுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் 40வீதத்தை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் களனி திஸ்ஸ மின்நிலையம் அமெரிக்காவிடம் இருந்தபோது நித்திரை கொண்டார்களா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இலங்கை மின்சார சபையின் 52வது வருட நினைவு தின நிகழ்வுகள் நேற்றைய தினம் மின்சாரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதனையடுத்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்

அமைச்சர் கம்மன்பிலவின் கூற்று தவறானது. கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40வீதத்தை அமெரிக்காவுக்கு வழங்குவதை எதிர்க்கும் அவர்கள் களனிதிஸ்ஸ மின்உற்பத்தி நிலையம் நூறு வீதம் அமெரிக்கா வசம் இருந்தபோது எதையும் கூறவில்லையே ! அப்போது அவர்கள் நித்திரை கொண்டார்களா?

அரசாங்கத்துக்கு எதிராக பகிரங்கமாக அவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். உண்மையில் கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் பெருமளவு பங்கு அரசாங்கத்திடமே உள்ளது.

அவர்களது விமர்சனங்களுக்கும் நாம் பதிலளிக்கத் தயார். அவர்கள் நீதிமன்றம் செல்வதாக தெரிவித்துவருகின்றனர். முடிந்தால் நீதிமன்றம் செல்லட்டும். அப்போது நாம் பார்த்துக் கொள்ளலாம். அவர்கள் எத்தகைய கதைகளை கூறி வந்தாலும் மேற்படி விவகாரம் தொடர்பாக அமைச்சரவையில் அனைவருக்கும் தெளிவாக கூறப்பட்டது. அதனால்தான் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கோருகின்றோம்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மூவருமே தற்போது உலகில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பயணிக்கும் நிலையில் அமைச்சர்கள் என்ற வகையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அவர்கள் சிந்திப்பது மிகவும் முக்கியம். டொலர் பிரச்சினை உலகளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு அரசாங்கம் முகம் கொடுத்து வருகின்றது. மக்களை வீதிக்கு கொண்டுவரும் நேரமா இது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக உலகளாவிய ரீதியில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. அத்தகைய பொருளாதார நெருக்கடிக்கு நமது நாடும் முகங்கொடுத்துள்ளது.அதனை நிவர்த்தி செய்வதற்கே அரசாங்கம் செயல்படுகிறது.

சீனா போன்ற நாடுகளில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே கைத்தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அங்கு எரிபொருளுக்கு கோட்டா முறையே வழங்கப்படுகிறது. எனினும் எமது அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.

Related posts