நடிகர் டாம் குரூஸ் கார், உடைமைகளுடன் திருட்டு

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தற்போது இம்பாஷிபிள் படத்தின் 7-வது பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அவர் இங்கிலாந்தில் முகாமிட்டு உள்ளார். அங்குள்ள பிர்மிங்காம் நகரில் டாம் குரூசின் கார், உடைமைகளோடு திருட்டு போய் விட்டது. இதனால் டாம் குரூஸ் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் காரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி இருந்ததால் போலீசார் தீவிரமாக தேடி தற்போது கண்டுபிடித்து மீட்டுள்ளனர். ஆனாலும் காருக்குள் இருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டு இருந்தன. இந்த காருக்கு சாவி இல்லை என்றாலும் திருடர்கள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கார் கதவை திறந்து ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “பிர்மிங்காம் சர்ச் தெருவில் இருந்து பி.எம்.டபிஸ்யூ. எக்ஸ் 7 ரக கார் திருடப்பட்டு உள்ளது என்று எங்களுக்கு புகார் வந்த சில மணி நேரத்தில் சம்த்விக் பகுதியில் அந்த கார் மீட்கப்பட்டது. திருடர்களை பிடிக்க சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர்.

——–

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயாகியாக உயர்ந்தார். பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடிக்க லண்டன் சென்றுள்ளார். அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த தொடர் தயாராகி வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு பிரியங்கா சோப்ராவுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு புருவ பகுதியில் அடிபட்டு ரத்தம் வழிவது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள பிரியங்கா சோப்ரா, “எனக்கு காயம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் புருவத்தில் இல்லை. கன்னத்தில்தான் காயம் ஏற்பட்டு இருக்கிறது” என்றார். கன்னத்தில் காயம் ஏற்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Related posts