ஹிஷாலினியின் மரண வழக்கில் 5ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில் தீக்காயங்களுடன் மரணமடைந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி ஜூட் குமாரின் மரணம் தொடர்பான வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ரிஷாட் பதியூதீன் எம்.பியின் மனைவி, மனைவியின் தந்தை, தரகர் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 06 ஆம் திகதி வரை, மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் (23) கொழும்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

டயகமவைச் சேர்ந்த ஹிஷாலியின் மரணம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சிஹாப்தீன் ஆயிஷா (46), மொஹமட் சிஹாப்தீன் (70), சங்கர் என அழைக்கப்படும் பொன்னையா பண்டாரம் (64) ஆகியோர் கடந்த ஜூலை 23ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

——-

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும். மாவட்ட செயலகங்களின் ஊடாக கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை விரைவாகத் தயாரிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை பொது முடக்க காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அரச உதவி எதுவும் பெறாத வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென அரசினால் வழங்கப்பட உள்ள ரூபா 2,000 இற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு ரூபா. 2,000 நிவாரணத்தை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் ஆரம்பமாகும் என்றும் அதற்கிணங்க முதற்கட்டமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

13 பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கூடாக மேற்படி கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்கள் தொடர்பில் தெரிவித்துள்ள அவர், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமே அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடமாடும் வர்த்தகர்களிடம் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் மாவட்ட செயலகம் மற்றும் கிராம சேவை அலுவலர், நுகர்வோர் விவகார அதிகார சபையிடமும் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போலன்றி இம்முறை தீவிர கண்காணிப்புடன் மேற்படி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றி வளைப்புக்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts