முதல் பார்வை: எதிரி

பிஜோய் நம்பியார் இயக்கியிருக்கும் இந்தக் கதையில் ரேவதி ஒரு கொலைக்கான சாட்சியாகிறார். இறந்து போனது அவரது கணவர். கொன்றது விஜய் சேதுபதி. ஆனால், யார் கொலையாளி என்று தெரிந்தும் அமைதி காக்கிறார் ரேவதி. அதற்கான காரணம் என்ன, விஜய் சேதுபதி ஏன் கொலை செய்தார், இதுதான் எதிரி.
ரேவதி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் என பிரபலமான நடிகர்கள், மணிரத்னம் எழுதியிருக்கும் கதை எனப் பல பெரிய தலைகள் இருக்கும் படம். ஆனால், இந்தப் படமும் ஏதோ ஒன்று இல்லையே என்றே உணர வைக்கிறது.
ரேவதி என்ன மாதிரியான ஒரு நடிகை, அவரது நடிப்புத் திறனுக்கு இங்கு முழு தீனி இல்லை என்பதை இந்தப் படம் பார்த்தால் நாம் உணரலாம். கணவர் இழந்த அதிர்ச்சியை, அதற்குப் பிறகான காட்சிகளிலும் தொடர்வது, தனது குற்ற உணர்ச்சியைப் பகிர்வது என இந்தக் கதையைத் தனியாளாகத் தாங்குகிறார்.
ஏதாவது ஒரு நடிகருக்குச் சரியான முக்கியத்துவமும், அவர் நடிப்புத் திறனைக் காட்ட ஏதுவான காட்சிகளும் பாயசம் நீங்கலாக மற்ற கதைகளில் இல்லை. அப்படி குறைந்தது ஒரு கதாபாத்திரத்துக்குச் சரியான முக்கியத்துவம் இருக்கும்போது நிறையோ, குறையோ நம்மால் அந்தக் கதையை ஒன்றி ரசிக்க முடிகிறது.கோவிந்த் வசந்தாவின் இசை, ஹர்ஷ்வீர் சிங் ஓபராயின் ஒளிப்பதிவு இந்தப் படத்தின் அடுத்த தனிச்சிறப்புகள். மஞ்சள் நிற விளக்கு பல காட்சிகளில் இடம் பெறுகிறது. இதன் அர்த்தம் இயக்குநருக்கே வெளிச்சமாக இருந்தாலும் காட்சி அழகியலுக்கு நன்றாக இருக்கிறது. கதைக் களனின் தன்மையைத் தனது இசையின் மூலம் நம் மனதில் கடத்துகிறார் கோவிந்த் வசந்தா.
விஜய் சேதுபதி இந்தப் படத்திலும் விஜய் சேதுபதியாகவே இருக்கிறார். அவரது வழக்கமான வசனம் பேசும் பாணி, உடல் மொழி எல்லாம் தொடர்கிறது. பிரகாஷ் ராஜுக்கு ஏன் இவ்வளவு சின்ன கதாபாத்திரம் என்று யோசிக்கும்போதே அதைவிடக் குறைந்த அளவு காட்சிகள் கொண்ட அசோக் செல்வனைப் பார்க்கும்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை.டைசியில் ரேவதி பேசும் வசனமே இந்தக் கதையின் சாராம்சம். வழக்கமாக இயக்குநர் மணிரத்னம் உருவாக்கியிருக்கும் உலகின் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயங்கள் இவை. இந்தப் பாணி சிலருக்கு நன்றாக இருக்கலாம்., சிலருக்குப் போலியாத் தெரியலாம். நவரசாவின் பெரும்பாலான ரசங்களைப் போலவே இதுவும் கொஞ்சம் கலவையான உணர்வையே தருகிறது. கடைசியில் ரேவதியின் வசனத்தில் குற்ற உணர்வு என்பது நமக்குப் புரியும் அளவுக்குக் கருணை புரியவில்லை.

Related posts