பிச்சைக்காரர்களும் உழைக்க வேண்டும்..

வீடற்ற பிச்சைக்காரர்களும் உழைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அரசே இலவசமாகக் கொடுக்க முடியாது. மேலும், அப்படிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் இதுமாதிரியான மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள வீடற்ற பிச்சைக்காரர்களுக்கு மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடி தண்னீர், சுகாதாரமான பொதுக் கழிப்பிடங்கள் கிடைப்பதை மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் உறுதி செய்ய உத்தரவிடக்கோரி பிரஜேஷ் ஆர்யா என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திபாங்கர் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கர்ணி அடங்கிய அமர்வு கூறியதாவது:
மும்பையில் உள்ள வீடற்ற பிச்சைக்காரர்களுக்கு மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடி தண்னீர், சுகாதாரமான பொதுக் கழிப்பிடங்கள் கிடைப்பதை மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் உறுதி செய்ய உத்தரவிடக்கோரி பிரஜேஷ் ஆர்யா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.இது தொடர்பாக மும்பை முனிசிபல் கார்ப்பரேஷ தரப்பில், “மும்பையில் உள்ள அனைத்து ஏழை, எளிய வீடற்ற பிச்சைக்காரர்களுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது” என்று அளிக்கப்பட்டுள்ள பதிலை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.
இதைத்தாண்டியும் வேறு உதவிகளைச் செய்யுமாறு உத்தரவிடத் தேவையில்லை என்றே நீதிமன்றம் கருதுகிறது.
மேலும், “வீடற்ற பிச்சைக்காரர்களும் நாட்டின் நலனுக்காக உழைக்க வேண்டும். உழைக்கும் சக்திவாய்ந்த அனைவருமே ஏதேனும் ஒரு வேலை செய்து உழைக்கின்றனர். வீடற்றவர்களும் உழைக்கலாமே. அதைவிடுத்து அவர்களுக்கு உணவு, தொடங்கி எல்லாவற்றையும் அரசாங்கமே செய்துகொடுக்க முடியாது.மனுதாரர் கோரியது போல் மூன்று வேளையும் சத்தான உணவு, சுகாதாரமான தண்ணீர், சுத்தமான கழிவறை வசதி என எல்லாவற்றையும் அரசாங்கமே உறுதிப்படுத்தினால் இத்தகைய பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை தான் அதிகரிக்கும்” என்று கருதுகிறோம்.
ஆனால், அதே வேளையில், வீடற்ற பிச்சைக்காரர்கள் இலவசமாக கழிப்பிடங்களைப் பயன்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related posts